விழித்திடு... விழித்திரு
எத்தனை நாள் இன்னும் அவலத்தில்
எம் வாழ்வு
இத்தனை நடந்த பின்னும்
எத்தனை எதிர்க்காமற் பலர்
சொத்தினைப் பறித்தான்
எம் சொந்தத்தைச் சிதைத்தான்
எத்தனையோ பேரை எங்கும்
ஏதிலியாய் அலைத்தான்
மத்தினைப் போலிருந்தே எமைக்கடைந்து
எம் உதிரத்தைக் குடித்தான்
பத்துடன் பதினொன்றாய்
எண்கள் மட்டும் ஆகுது நம்முடல்கள்
வெளி நாட்டார் வந்தனர்
உல்லாசப் பயணத்திற்காய்
உள் நாட்டார் சென்றனர்
ஊர் அற்ற அகதிகளாய்
தமிழ் நாட்டாரும் வெளிநாட்டு
தமிழரோடெமை அணைக்க
எம் உயிர் மட்டும்
எஞ்சி நிற்கத்
தள்ளாடி நிற்கிறோம் இத்
தரணியில் நாம்
இன்று நம் ஈழத்து
வீதிகளில் நாய்கள் மட்டும் நடமாட
ஓடி ஆடவேண்டிய சிறுசுக்கள் தாய்
முகம் பார்த்தழுகிறன
தாயோ தன் கணவன் தோள்
தேடுகிறாள் முகம் புதைக்க
பத்து நாள் முன் தான் இவள்
பத்து வயதுப் பாலகனை
பசிக்கு உணவிற்காய்
பண்ட மாற்றுச் செய்திருந்தாள்
பசியும் தீரவில்லை இவள்
சிசுவின் நினைவும் போகவில்லை
ஓராயிரம் ரூபாய் ஓர் நாள்
கஞ்சிக்கும் போதவில்லை
இவர் அடுப்படியில் பூனை
மட்டும் சுருண்டு படுக்கிறது
சூடேதும் இனி
படாதென்ற தைரியத்தில்
ஈரறிவுப் புழுவோ எதிர்த்துப்
போராடும் அதைத் தாக்கின்
ஆறறிவு மனிதர் நாம்
இத்தனை நடந்த பின்பும்
எழுந்து நிற்க வேண்டாமோ?
எதிர்த்து நிற்க வேண்டாமோ?
சுருண்டு படுத்திருந்தால்
சுடவந்தவன் ஓடிடுவானோ?
கண்தோண்ட வந்த கரடி முன் நின்று
கண் மூடிக் கடவுளை வணங்கி என்ன பயன்?
விழித் திடு தமிழா
விழித் திரு
இனியேனும் எம் விடுதலைக்காய்
உழைத் திடு
0 Comments:
Post a Comment
<< Home