இங்கிலாந்து
தமிழீழத்திலிருந்து இடம் பெயர்ந்த பின்பு, நான் வந்து குடியேறிய நாடு அவுஸ்ரேலியா - மெல்பன். கிட்டத்தட்ட பத்து வருடங்களாட அங்கேயே வசித்ட்து விட்டு, இங்கிலாந்தில், ஒரு வருடம் எனது சொந்த அலுவலாக வந்திருக்கின்றேன்.
முதலில் இங்கு எனக்குப் பிடித்த விடயங்களைச் சொல்கிறேனே: இங்கு சாரதிகளுடைய விட்டுக் கொடுக்கும் மனப் பாங்கு எனக்கு மிகவும் பிடித்திருந்தது, அதாவது, ஒரு வீதியில் இருந்து நீங்கள் இன்னொரு வீதிக்கு உங்களது காரினைச் செலுத்த வேண்டும் எனின் இங்கு சாரதிகள் உங்களுக்கு இடம் விட்டுத் தருவார்கள், அது எவ்வளவு வாகன நெரிசலாக இருந்தாலும் சரி.
இங்கு பழமையினைப் பேண்பதிலும் அதனைப் பாதுகாப்பதிலும் இவர்களுக்கு இணை இவர்களே, இங்குள்ள பொருட் காட்சியகத்திற்கு நீங்கள் சென்றால் நிறைய வரலாறு பாற்றிய சான்றுப் பொருட்களையும் மற்றும் ஆவணங்களையும் பார்க்கலாம். குறிப்பிட வேண்டிய இன்னும் ஒன்று இங்குள்ள மெழுகுப் பொம்மைகள் காட்சியகம்; அதாவது, உலகத்தில் பிரசித்தி பெற்றவர்கள் பெரும்பாலானவர்களின் உருவம் மெழுகுப் பொம்மைகளாக இங்கு செய்து வைக்கப் பட்டிருக்கின்றன.
ஒரு சிலர் இங்குள்ள பக்கிங்காஃம் மாளிகையினையும், மற்றும் வெளியே அசையாது நிற்கும் காவலர்களையும் குறிப்பிட்டுக் கூறுவார்கள்.
இங்கிலாந்தைப் பொறுத்தவரை நிறைய விடையங்கள் எனக்குப் பிடிக்கவில்லை; ஏன் என்று கேட்பீர்களானால்: இங்கு வாழ்க்கைச் செலவு அதிகம் ஆகையினால் இங்குள்ள மனிதர்களது வாழ்வு ஒரு இயந்திர வாழ்வு போன்றது. அனேகமானோர் இரண்டு வேலைகளோ அல்லது வாரத்தில் 60 மணித்தியாலத்திற்கு மேல் வேலை செய்பவர்களாகவோ இருப்பார்கள். கணவனும் மனைவியும் வாரத்தில் ஒரு நாளோ அல்லது சில இடங்களில் வாரத்தில் 2 மணி நேரம் தான் சந்திப்பார்கள் அவர்களுடைய வேலை காரணமாக. ஏதாவது வீட்டில் இருப்பவருடன் பேச வேண்டுமாயின் பொதுவாகத் தொலைபேசி ஊடாகவோ (மொபைல்) அல்லது ஒரு சிறு கடிதம் எழுதி குழிர் சாதனப் பெட்டியில் (ஃபிரிஜ்) ஒட்டி விட்டோ வெளியே செல்வார்கள். ஆகவே வாழ்வதற்காக வேலை செய்கின்றோம் என்று இன்றி, வேலை செய்வதற்காக வாழ்கின்றார்கள் இங்கு.
இங்கு வீதிகளை விட வாகனங்கள் அதிகம், வீதிகளின் அகலத்தினை விட, வாகனம் தரித்து நிற்பதற்குத் தேவையான இடமும் அதிகம். மற்றும் வாகனம் செல்வதற்கு ஒரு சிறிய பாதையே, ஆகையினால் வாகன நெரிசல் அடிக்கடி ஏற்பட்டு மக்களின் பாதி வாழ்வு வீதிகளிலேயே கழிந்து விடுகின்றன.
நம் தமிழ் மக்கள் (இலங்கை, இந்தியா) மற்றும் வடக்கு இந்தியர்கள் அதிகமாக வாழ்கின்றார்கள், சில இடங்களுக்குச் சென்றால் கொழும்பிலோ அல்லது, சென்னையிலோ/ மும்பாயிலோ நிற்பது போன்ற பிரம்மை தோன்றும். நம் மக்கள் இங்கு இருப்பது பிரச்சனையாகவோ எனக்குப் பிடிக்காமலோ இதனை எழுதவில்லை, அவர்கள் வாழ்க்கை முறைகள் எனக்குப் பிடிக்காமலே இதனை நான் இங்கு குறிப்பிடுகிறேன்.
வாலிபர்கள் ஒரு சிறு குழுக்களாக இருந்து ஒரே அடி பிடிகள், சண்டைகள், கொலைகள், களவுகள், கஞ்சா என ஏகப்பட்ட பிரச்சனைகள். பெற்றோர்களோ காசு சேர்ப்பதிலும் நகைகளை அடுக்கடுக்காக அணிவதிலுமே கவனம் (எனது ஒன்று விட்ட சகோதரியை ஒரு பிறந்த நாள் விழாவில் பார்த்தேன்... முழங்கை வரை தங்கக் காப்பும் கழுத்து நிறைய நகையும்... அத்துடன் 50 பவுணில் தாலியும்... தாலியைப் பார்த்தால் ஏதோ பாம்புக் குட்டியை பிடித்து கழுத்தில் விட்டிருந்தது போல் இருந்தது) ஆக இப் போலிப் பகட்டும் தேவையற்ற டாம்பீகமும், வரட்டுக் கெளரவமும் அவர்கள் பீத்திக் கொண்டிருக்கும் விதமும் எனக்கு இங்கு பிடிக்கவில்லை.
நம் நாடுகளில் சாதிக் கொடுமை மாதிரி இங்கு சில இடங்களில் நிறவாதப் பிரச்சனைகள். (அண்மையில் சில்ப்பா செட்டிக்கு நடந்தவற்றினை அறிந்திருப்பீர்கள் என எண்ணுகின்றேன்).
இந்தியர்களுடைய அல்லது தமிழர்களுடைய கடைகளுக்குச் சென்றால் Credit Card பாவிக்கப் பயமாக இருக்கும், ஏன் எனின் இங்கு Credit Card இனை வைத்து நிறையக் கள்ள வேலை செய்கிறார்கள். அத்துடன் நமது நாடுகளை விட மோசமாக பிக் பொக்கெற், கொள்ளைகள் இங்கு தாராளம். காவற்துறையினரும் எவர் எவரை என்று பிடிப்பது ஆகையினால் அவர்கள் சிலவேளைகளில் கண்டு கொள்வதே இல்லை. இங்கு சிறைகள் நிரம்பி வழிவதாகவும், குற்றவாழிகள் சிறை செல்ல waiting list இல் இருப்பதாகவும் அண்மையில் அறிவித்திருந்தார்கள்.
இங்கு கட்டிடங்கள் பொதுவாகவே மிகவும் பழங்காலத்துக் கட்டிடங்கள். பொதுவாகவே எங்கு சென்றாலும் நெருப்புப் பெட்டி அடுக்கியது போன்று Flats அதிகமாக ஒரு நிரையில் இருக்கும். ஒருவர் இருப்பிடத்தினைக் கண்டு பிடிப்பின் அவர் வீட்டு இலக்கத்தினை வைத்தே கண்டு பிடிக்க முடியும்.
இப்போது, மற்றைய ஜரோப்பிய நாடுகளில் இருந்து இங்கு பலர் வருகின்றார்கள், ஏன் எனின் இங்கத்தைய பணத்தின் பெறுமதி அதிகம் என்பதனால். அவர்கள் குறைந்த கூலிக்கு வேலை செய்யத் தயாராக இருப்பதனால், இங்கு வாழும் மக்களிற்கு வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் குறைந்து கொண்டே செல்கின்றன.
ஆக எனது பார்வைக்கு இங்கிலாந்து ஒரு தங்க முலாம் பூசப்பட்ட ஒரு தகரத் தட்டு. முலாம் கொட்டித் தகரங் கறை பிடிக்கும் நிலையில் இப்போது இந் நாடு உள்ளது.
2 Comments:
//வாலிபர்கள் ஒரு சிறு குழுக்களாக இருந்து ஒரே அடி பிடிகள், சண்டைகள், கொலைகள், களவுகள், கஞ்சா என ஏகப்பட்ட பிரச்சனைகள்.//
கட்டுப்பாடுகளோ கண்டிப்பவர்களோ இல்லாததால் இருக்கலாம்.
தொடர்ந்து பதியுங்க..
தில்லகன் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி...
இங்கிலாந்து... கட்டுப் பாடுகள் இருப்பினும்... அது நிலைப்பாட்டுடன் இல்லை... இங்கிலாந்து போலவே பளைய போக்கினை உடையவை.
Post a Comment
<< Home