தமிழில்

எனது தமிழ் ஆக்கங்களினை இப் பதிவில் நீங்கள் பார்க்கலாம்... எனது ஏனைய பதிவுகளைப் பார்ப்பதற்கு "View My Complete Profile" இனை அழுத்தி வேண்டிய பதிவினைத் தெரிவு செய்க.

Wednesday, May 16, 2007

இந்திய இசையும்... இனிய இயல்பும்...

இராகங்கள் பதினாறு உருவான வரலாறு... நான் பாடும் போது அறிவாயம்மா.
பல நூறு இராகங்கள் இருந்தாலென்ன...
பதினாறு பாடச் சுகமானது....

ஆமாம்... அந்தப் பதினாறென்ன... அப் பல நூறு இராகத்திலமைந்த பாடல்களுமே மனதிற்கு ஒவ்வொரு வகையில் இன்பம் தருவனவாகவே அமைந்துள்ளன. இந்தியர்களின் கண்டு பிடிப்புக்களில்; இசைக்கு அவர்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து, அவற்றை ஆராய்ந்து, பாகுபடுத்தி; இராகம், தாளம், சுருதி, சந்தம்... என எவ்வளவோ விதமாகப் பட்டியலிட்டு... ஒழுங்கு படுத்தி இவற்றை அமைத்துள்ளனர்.

காலையில் பாடவேண்டிய இராகம், அதாவது காலையில் எழும் பொழுது இவ்விராகத்தைக் கேட்டு எழுந்தால் அன்றைய பொழுது எமக்கு சுறு சுறுப்பாகவும், மனச் சந்தோசம் நிறைந்ததாகவும், ஒரு முழுமை மிக்க நாளாகவும் அமையும் என்பது மனோவியல் நிபுணர்களின் கருத்து. மாலையில் பாட வேண்டிய இராகம், இது ஒருவர் ஒரு நாட் பொழுதில் கடினமாக உழைத்து வீடு திரும்பும் பொழுது இந்த இராகத்தில் பாடலைக் கேட்டாலோ பாடினாலோ அவருக்கு மீண்டும் புத்துணர்சி ஏற்பட்டு, உடல் நிலை இலகுவாகும் என்று மனோவியல் நிபுணர்கள் கருதுகின்றார்கள். இவ்வாறு ஒவ்வொரு சிறு நிகழ்வுகளுக்கும் உரிய இராகங்கள், பாடல்கள் என அடுக்கிக் கொண்டே செல்லலாம். இவ்வாறு அக் காலத்திலேயே அவர்கள் நடாத்திய ஆய்வுகளும் அதனால் உருவாகிய அவர்களது கண்டு பிடிப்புக்களும் அபாரமானவை.


இக் காலத்தில் விஞ்ஞான வளர்ச்சியின் பின்பு இந்தியக் கண்டுபிடிப்புகள் பல விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் பட்டும் உள்ளன. இவை இராகத்திலோ பாடலிலோ மட்டும் அல்லாது, நமது யோகாசனம், தியானம், சித்த மருத்துவம், சமையல் அதாவது சமையலும் எமது சமையலில் சேர்க்கப்படும் ஒவ்வொரு வகையான வாசனைத்திரவியங்களோ அல்லது, எதுவாக இருப்பினும் அவை யாவும் மருத்துவ குணம் நிறைந்தவை என்பதும் இக் காலத்திலே மேலைத்தேயர்களால் விஞ்ஞான முறையில் நிரூபிக்கப் பட்டுள்ளன.
இவை இப்படி இருக்க நமது பெருமையே நமக்குத் தெரியாது, நம்மை நாமே தாழ்வாகப் பேசி வாழ்பவர்கள் பலர். சிலர் தாம் இந்திய வம்சத்தினர் என்பதனை வெளியில் கூறிக் கொள்ளவே வெட்கப்பட்டு வாழ்பவர்களாக இருக்கின்றார்கள்; இப்படியானவர்கள் சிலரைச் சில மேலைத்தேய நாடுகளில் நான் கண்டிருக்கின்றேன். இவர்கள் எல்லாம் தாம் நடந்து வந்த பாதையினை அறியாதவர்கள், போகும் இடமும் தெரியாதவர்கள் என்றே நான் எண்ணுகின்றேன். தன் சுய இலாபத்திற்காகத் தன் இனத்தினையே தாழ்த்திக் கூறுபவனையும், காட்டிக் கொடுப்பவனையும் விட வேறெவரும் தாழ்ந்தவனாக இருக்க மாட்டான் என்பது என் கருத்து.


அண்மையில் அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள தென் மெக்லீன் செல்வ விநாயகர் கோவிலில் அமைதியும், மழையும் வேண்டிப் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் வனஜா சுந்தரராஜன் என்பவர் எழுதிய பாடல்கள் பாடப்பட்டன; வனஜா சுந்தரராஜனும், இந்திரா ஸ்ரீநிவாசனும் அமிர்த வர்ஷினி இராகத்தில் ஒரு பாடலைப் பாடினார்கள். நீரின் அதிபதியான வருண பகவானுக்குகந்த இராகத்தில் பாடல்கள் பாடப்பட்டதனைத் தொடர்ந்து பல மாதங்களாகப் பெய்யாத மழை அன்று மாலை குயீன்ஸ்லாந்தில் மழை பெய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


என்னைப் பொறுத்தவரையில், இந் நிகழ்வானது தற்செயலாகவே நடந்திருந்தாற் கூட, அக்காலத்தில் நம்மவர்கள் வருணனுக்கு என்றும் ஒரு இராகம் அமைத்திருப்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது இந்திய மூதாதையர்களை நினைத்துப் பார்க்கையில் மிகவும் பெருமையாக உள்ளது.

7 Comments:

At 4:52 AM, Blogger சந்திப்பு said...


அண்மையில் அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள தென் மெக்லீன் செல்வ விநாயகர் கோவிலில் அமைதியும், மழையும் வேண்டிப் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் வனஜா சுந்தரராஜன் என்பவர் எழுதிய பாடல்கள் பாடப்பட்டன; வனஜா சுந்தரராஜனும், இந்திரா ஸ்ரீநிவாசனும் அமிர்த வர்ஷினி இராகத்தில் ஒரு பாடலைப் பாடினார்கள். நீரின் அதிபதியான வருண பகவானுக்குகந்த இராகத்தில் பாடல்கள் பாடப்பட்டதனைத் தொடர்ந்து அன்று மாலை குயீன்ஸ்லாந்தில் மழை பெய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


இந்திய இசை பற்றிய அறிமுகம் நல்ல முறையில் அமைந்துள்ளது. இந்திய இசை மூலகர்த்தாக்களை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். அதே சமயம் ஆ°திரேலியாவிலும் இந்திய மூடப்பழக்கத்தை கடை சரக்காக்கிடும் இழிநிலையை நிச்சயம் எதிர்த்தேயாக வேண்டும். மழை பொழிவதற்கும், பொழியாமல் இருப்பதற்கும் ஒரு அறிவியல் காரண காரியம் உண்டு. எனவே, இதனை அறிவியல் ரீதியாக அணுகுவதுதான் சமூகத்திற்கு நல்லது. இல்லையென்றால் பிரபஞ்சத்தில் நடக்கும் அனைத்து செயல்களுக்கும் தெரியாத ஒன்று காரணமாகி விடும். இது சமூக வளர்ச்சிக்கு எதிரானது.

 
At 5:47 PM, Blogger Haran said...

நல்ல ஒரு கருத்து நண்பரே...நன்றி உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்.

நிச்சயமாக நமது மூடப் பழக்கங்களை அடியோடு அழித்து ஒழிக்க வேண்டும் எனபதுவே எனது எண்ணமும் கூட. ஆயினும்... அதில் கூட எனக்கு சில கருத்து முரண்பாடு உள்ளது, அதாவது, ஒரு மூடப் பழக்கத்தால் கெட்டவை நடக்காது விடின் அதனால் யாருக்கும் ஒரு பாதகமும் நிகழாது விடின் அதனை அனுமதிப்பதில் தப்பில்லை என எண்ணுகின்றேன்...

ஒருவருக்கு நல்ல விடயமாகத் தெரிவது, இன்னொருவருக்கு கெட்ட விடயமாகத் தெரியலாம்; அவ்வாறே கடவுள் நம்பிக்கை என்பது, ஒருவனுக்கு மிகச் சிறந்த விடயமாகத் தெரியும், இன்னொருவனுக்கு அதுவே நேரத்தை வீணடிக்கும் வேலையாகவோ அல்லது மூடர்களின் செயலாகவோ தோன்றும்...

அனைத்தினையும் நாம் ஆதரிக்க வேண்டும் என்பதல்ல எனது கருத்து, ஆனால் அனைத்தினையும் ஆராய்ந்து ஆதரிக்க வேண்டும் என்பதுவே எனது தாழ்மையான கருத்து.

 
At 4:24 AM, Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

எனது இசையின் மகிமையை அழகாகக் கூறியுள்ளீர். இதை அறியாது கேலிசெய்யும் நம்மவரைப் பார்த்துப் பரிதாபப் படுவது தவிர ஏதும் இல்லை.
ஆனால் உலக அரங்கில் நம்மிசை தன் இடத்தை மெல்லமெல்ல பிடித்து வருகிறது. மேல்நாட்டார் சிறப்பை உணரத்தலைப்பட்டு விட்டனர்.
எனினும் இந்த மழை விடயம்..அவர் அவர் நம்பிக்கைக்கு உட்பட்டவிடயம்.
நான் ஈழத்தில் மலையகத்தில் கடமை புரிந்த போது; வருடா வருடம் ரத உற்சவம் வீதி தோறும் வரும்; ரதம் அங்கே மாலை தான், இழுப்பார்கள்...ஆனால் பகல் முழுதும் மழையாக மாலை
அதன் சுவடே தெரியாதிருக்கும்; நான் இருந்த வீட்டு அம்மா கூறுவார் " அது முருகன் அருள் புறப்பாட்டிற்கு முன் வீதியைக் கழுவி விடுகிறார்"...
உண்மையின் இதை 4 வருடம் நான் கண்டேன். 5 வது வருடம் (83ல்) இந்த ரத உற்சவமே ;குறிப்பிட்டநேரத்துக்கு முதல் முடிவுற்றதும்; இரவு கோவில் தீக்கிரையானதும்; கேள்விக்
கப்பாற்பட்ட விடயமா??
அப்போ மழையை அனுப்பி தீயை அணைத்து; பல தமிழர் உடமையையும் உயிரையும்; தன் கோவிலையும் ஏன் இந்த முருகன் காப்பாற்றவில்லை...எனக் கேட்டால்; கறுத்தச் சட்டைக் காரனாடா?
நீ என்பார்கள்.
எனவே...அவர் அவர் சுதந்திரம்...நம்பிக்கை..என விடுவதே! மேல்.

 
At 4:54 AM, Blogger Haran said...

பாரிஸ் யோகனண்ணா,
நீஙகள் கூறுவது என்னைப் பொறுத்தவரையில் உண்மையான விடயம்.
அதே போலவே நீங்கள் கூறுவது போல் கடவுள் நம்பிக்கை என்பதும், நம்பிக்கை இன்மை என்பதும் அவரவர் சொந்த விடயம்.

நம்பிப் பார்ப்பவனுக்குக் கல்லுங் கடவுள், நம்பாதவனுக்க்கு அதுவே வெற்றுக் கல் என்பது மிகவும் உண்மையான, பொருளடங்கிய ஓர் கூற்று.

 
At 5:55 PM, Blogger வி. ஜெ. சந்திரன் said...

ஹரன் பாட்டை கேட்பது மட்டும் தான். எங்கள் பாடசாலையில் ஆண்கள் சங்கீதம் படிப்பதில்லை எண்ட கலாச்சாரம் உங்கள் வகுப்புக்கு பிறகு தான் மாறியிருக்க வேணும். எங்களுக்கு சங்கீதம் சுத்த சூனியம்.

 
At 6:28 PM, Blogger Haran said...

வி.ஜெ...
நாம் படிக்கும் பொழுது கூட நிறைய ஆண்கள் சங்கீதம் ரியூசனுக்குச் சென்றதால் அவர்கள் கட்டாயப் படுத்தி தான் எமது பாடசாலையில் ஆண்களுக்கும் சங்கீதம் அனுமதிக்கப் பட்டது... அதற்கும் "பாம்" முதலில் ஒத்துக் கொள்ளவில்லை... "ஆம்பிளையளுக்கு எதுக்கு சங்கீதம்" என்று தான் தனது பழைய புராணத்தைச் சொல்லிக் கொண்டு இருந்தார்.

ஆயினும் என்னை எனது பெற்றோர் எனக்கு மிகவும் சங்கீதத்தில் ஆர்வம் இருந்தும், சங்கீதம் படிக்க அனுமதிக்கவில்லை... "என்ன சங்கீதம் படிச்சுக் கச்சேரியே வைக்கப் போறாய்" எண்டு சொல்லி என்னை ஒண்டும் செய்ய விடாமல் பண்ணிப் போட்டினம். அப்பிடித் தான் நான் கராட்டி/ கீ போர்ட் போன்றன படிக்க கேட்ட பொழுதும் "கராட்டி படிச்சு என்ன சண்டைக்கே போகப் போறாய்... சும்மா போய் படிப்பில கவனத்தை செலுத்து" எண்ணுவினம். இவை எல்லாம் இப்பவும் எனக்கு மனதில் பெரும் தாக்கங்கள்... எனக்கு ஒன்றும் தெரியாது என்ற தாழ்வுணர்ச்சி...

பிறகு வெளி நாடு வந்த பின்னர் சில மாதங்கள் சங்கீதம் பயின்றேன் எனினும் எனது படிப்பு, வேலை காரணமாக எனக்கு விருப்பம் இருந்தும் தொடர்ந்து சங்கீதம் பயில முடியாத நிலை எனக்கு...

 
At 7:21 PM, Blogger வி. ஜெ. சந்திரன் said...

ம் ம் பெரு மூச்சு தான் விடலாம்.
எனக்கு பரத நாட்டியம் பழக ஆசை. பழக போன்னான். வீட்டை தடை இல்லை. ஆனா ஸ்கொல சிப் எண்டு ஒண்டு, அதுக்கு படிக்க, பிறகு ரியூசனா முக்கியம், நடனமா முக்கியம் எண்டு கேள்வி வர ரியூசன் தான் முக்கியமா போச்சு. இரண்டு நேரங்களும் ஒத்துவரேல்லை. அதோட விட்டாச்சு. தொடர்ந்து பழகேல்லை எண்டு இப்பவும் கவலை.

 

Post a Comment

<< Home