அம்மா நீ எங்கே???

அம்மாவிற்குப் பூசை இன்று
அவள் மகன் கணபதிக்குப் பூசை நாளை
எல்லாந் தமிழர் விடிவு நாடி
விழுந்து வணங்கும் பக்த கோடி
அன்று வன்னிக்கு
இடம் பெயர்ந்தேன்
ஏதிலியாய்...
அம்மா உனை
அழைத்தேன் உன்னன்புப்
பேதலியாய்...
ஆயினும்...
அம்மாவுன் அரவணைப்பு - அன்றுங்
கிடைக்கவில்லை யெ(ம)னக்கு
எனினும்...
மனமே சோராது - என்றும்
மனத் தொலைபேசியில் தொடர்புற்றேன்
அதில் 'கலோ' சொன்னவன்
அம்மா உன் வீடும்
எறிகணையிற் சிக்கியது என்றான்...
இதில் பயந்து ஓடியவள் நீ
திரும்பி எட்டியும்
பார்க்கவில்லை என்றான்...
நீயே இராணுவத்திற்கும்
எறிகணைக்கும் பயந்
தோடித் திரிகையிலே...
எம்மை அரவணைக்க
எங்கே நேரம்
வரும் உனக்கு...
செய்தித் தாளில்
தேடப்படுவோர் விபரத்திலுங்
கொடுத்துப் பார்த்தேன்...
நீ எங்கு உள்ளாய்
என யாருக்குந்
தெரியவில்லை யம்மா...
சிரிப்பு வர - உன்னில்
கோபம் வர
அன்பு வர - என்னுள்
அழுகையும் வருகின்றது
ஏனென்று தெரியவில்லை
எவையெதற் கென்றும் புரியவில்லை
ஆழிப் பேரலை கொண்டு - அன்று
குமரியை அழித்தாய் நீ
வாழ்ந்த பேரினத்தை - இன்றுஞ்
சீற்றத்தாற் குலைக்கின்றாய்
இன்றும் வாழ விடாது
எமையே வதைத்து
அடிமை வாழ்வுடன்
ஆறாத் துயருடனே
எம்மை எதற்காய்
அலைவிக்கிறாய் தாயே
எங்கும் ஏதிலியாய் ஓடினும் - நாம்
என்றும் உன் நாமமே பாடி
தமிழர் நம் விடிவினை நாடி - நாம்
விழுந்து வணங்கும் பக்த கோடி
உனக்கின்று பூசை - நாளை
உன் மகனுக்கும் பூசை
தாயே நீ...
விடிவினைத் தருவாயா
இல்லை எம்மை இனியும்
விரட்டித் தான் அடிப்பாயா?
தாயிடங் கூட...
உனக்கொன்று செய்கிறேன்
எனக்கு ஒன்று செய்வாயா
என்றல்லவா கேட்கவேண்டி இருக்கிறது....
பதில் கொடு தாயே
நீ இன்னும் இருந்தால்...
2 Comments:
விரைவில், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும் ஹரன். கவலைப்படாதீர்கள்
அதுவே எமது நம்பிக்கையும் கதிரவன்... நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு
Post a Comment
<< Home