தமிழில்

எனது தமிழ் ஆக்கங்களினை இப் பதிவில் நீங்கள் பார்க்கலாம்... எனது ஏனைய பதிவுகளைப் பார்ப்பதற்கு "View My Complete Profile" இனை அழுத்தி வேண்டிய பதிவினைத் தெரிவு செய்க.

Thursday, May 17, 2007

மதம் சார்ந்தவர் மதம் பிடித்தவரா???

வலைப் பதிவாளர் ஒருவருடைய வாதத்திற்கு பதிலாக நான் இந்தப் பதிவினை இடுகின்றேன்

//உலகில் தவறு செய்யாது உலகில் சுமார் 95% கடவுள்நம்பிக்கை கொண்டவர்கள் இருக்கிறார்கள் (http://www.positiveatheism.org/writ/martin.htm). ஆகவே தவறு செய்பவர்களில் அதிகமானோர் கடவுள்னம்பிக்கையுள்ளவராக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். இதுவே என் வாதம்.கடவுள்னம்பிக்கை ஒருவனை செம்மைபடுத்துகிறதா?என்ற வாதத்திற்கு எதிர்வாதம் தான் இது.//

இதே வாதத்தின் படி பார்த்தால் உலகில் நல்லவை செய்பவர்களுள் அதிகமானோரும் கடவுள் நம்பிக்கை உடையவர்களாகவே இருப்பார்கள். (மீண்டும் அவர் வாதத்தினை வாசிக்கவும்).

கடவுள் நம்பிக்கை ஒருவரை நல்ல வழியில் செலுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, அது அவரை வெறியனாகவோ, ஜதார்த்த வாழ்வைப் பார்க முடியாதவனாகவோ செய்து விடக்கூடது என்பதே எனது எண்ணம்.

அண்மையில் ஒரு புத்தகம் வாசித்தேன், அது ஜேசு பற்றியது, அதில் ஜேசு மேரி மக்டிலனை திருமணம் செய்தார் அவரிற்கு குழந்தைகள் கூட உண்டு என நிரூபிக்கின்றது. ஜேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த் தெழுந்தார் என்பது பொய், அவர் அக் கால கட்டத்தில் இறக்கவில்லை... பைபிளில் கூறப்படுவதற்கும் பிற்பட்ட காலப் பகுதியில் பல ஆண்டுகளின் பின்பே அவர் இறந்தார் எனவும் மற்றும் பல விடயங்களும் அத்தாட்சிகளுடன் நிரூபணமாக எழுதி இருந்தார்கள்.

இதனை இந்துவாகிய நான் எனது கிறிஸ்தவ நண்பர் ஒருவருடன் பேசிய பொழுது, நண்பன் "அவர் உயிர்த்து எழுந்திருந்தால் என்ன, எழாமல் இருந்தால் என்ன... நான் ஜேசுவைச் சந்தித்த பின்பா அவர் வழிகாட்டலில் நடக்க ஆரம்பித்தேன்??, அவர் கூறிய நல்ல விடயங்கள் எனக்குப் பிடித்திருந்ததாலும் எனக்கு அது மனதிற்கு சந்தோசமும், மன அமைதி தருவதாலுமே அவரை நான் வழிபடுகிறேன். மொத்தத்தில் பைபிள் நமக்கு நல்லவற்றையே போதிக்கின்றது, அவ்வாறே மற்றைய சமய நூல்களும் நல்லவற்றையே போதித்து, நல்லவற்றையே செய்யுமாறு கூறுகின்றன... ஆகவே ஜேசு இருந்தாரா, அல்லது உண்மையா பொய்யா என்பது எனக்கு முக்கியமல்ல அவர் பெயரில் உருவாகிய கோட்பாடுகளும், தத்துவங்களுமே எனக்கு முக்கியம்" என்று கூறினான்.

எனது நண்பர் கூறியதில் எவ்வளவு ஜதார்த்தம் இருந்தது என்பதனை எண்ணிப் பார்த்தேன், நண்பர் கூறியதில் எந்தத் தவறும் இல்லை எனத் தோன்றியது; அதாவது நாம் கடவுள் இருக்கிறாரா இல்லையா என வாதிடத் தேவையில்லை, வாதிட்டுப் பயனும் இல்லை. ஏன் எனின் நான் அறிந்த வரையில் கடவுளை முன் கொணர்ந்து கடவுள் உள்ளார் என நிரூபிக்க முடியாது, ஆனால் கடவுளின் பெயரால் நல்லவற்றை நாம் கற்றுக் கொள்ளும் பொழுது அதனை ஆதரிப்பதில் தவறேதும் இல்லையே என எனக்குத் தோன்றியது.

எனக்குத் தெரிந்த சிலரில் ஒருவரைப் பற்றிக் கூறுகிறேன்: இவரும் இவர் குடும்பத்தினரும் கோவிலிற்கு அடிக்கடி செல்வார்கள், நல்ல பணக்காரர்கள், ஆனால் ஒரு சதமும் ஏழைகளுக்குக் கொடுக்க மாட்டார்கள். கோயில் கட்டுமானத்திலிருந்து, ஒவ்வொரு மாதமும் பல கோயில்களுக்குக் காசினை அள்ளி அள்ளிக் கொடுப்பார்கள், ஆனால் அனாதைச் சிறுவர்களுக்கு காசு சேர்க்கிறோம் காசு தருவீர்களா என்றால் வீட்டை விட்டுத் துரத்துவார்கள்.

சரி, அது தான் அவர்கள் சொந்த விருப்பம் என எண்ணி நாம் விட்டால், எனது நண்பன் ஒருவன் இலங்கையில் இருந்து இங்கு வந்திருந்தான் (நான் குறிப்பிடுபவர்கள் எனது நண்பனுக்கு மாமா முறை) இங்கு வந்த பொழுது அவனிடம் குளிருக்குப் போட ஒரு உடை கூட இருக்கவில்லை, அவர்களோ தமது (அவர்களிடம் கிட்டத்தட்ட 10 வீடுகள் உள்ளன) வீட்டு வேலைகள் (புல் வெட்டுதல், பூந் தோட்டம் அமைத்தல், வீட்டு சுவர் சுத்தம் செய்தல், paint அடித்தல்) அனைத்திற்கும் எனது நண்பனையே கூட்டிச் செல்வார்கள், ஆனால் அவனுக்கு குளிருக்குப் போர்க்க போர்வையோ அல்லது குளிருக்கு உடையோ கூட வாங்கிக் கொடுக்கவில்லை. அவன் இங்கு வந்த பொழுது நடுத் தெருவில் நிற்க வேண்டிய நிலையில் இருந்தான். அவர்கள் ஒரு உதவி கூடச் செய்யவில்லை.

இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இறைவனைக் கும்பிட்டு என்ன கும்பிடாது விட்டென்ன. இவர்கள் எல்லாம் பக்கத்து வீட்டில் மரண ஓலம் எழ அந்த ஒலியிலேயே தம் வீட்டில் "Party" வைப்பவர்கள்.

அதே போன்று சிலர் கண் மூடித்தனமாக இருந்து, தாம் செய்யும் கொலைகள் கொள்ளைகளுக்கும் கடவுளின் நாமத்தின் பெயரில் தாம் அதனைச் செய்வதாகக் கூறுகிறார்கள், ஆனால் எந்த ஒரு மதத்தினை நாம் எடுத்துக் கொண்டாலும் கடவுளின் வாசகங்களிலே, அனைவரிடமும் அன்பு காட்டும் படியே கூறப்பட்டுள்ளது.

ஆகவே மதங்கள் அன்பையும், பண்பையும், தர்மத்தினையும், அகிம்சையையுமே போதிக்கின்றன... ஆனாற் சில மனிதர் மதங் கொண்ட யானை ஆகி, அவர்களுடைய மதத்தின் பெயரினால் மதங் கொண்ட யானையிலும் விடக் கேவலமாக்கி விடுகின்றான்.
எமக்கு எம்மதமும் சம்மதமே, கடவுளின் பெயர்ப் பிரிவுகளால் அல்ல; அன்பு, பண்பு, அகிம்சை, தருமம் என்னும் பொதுக் கோடபாட்டின் அடிப்படையில்.

6 Comments:

At 10:25 PM, Blogger குட்டிபிசாசு said...

நண்பரே,
தாங்கள் கூறியது முற்றிலும் உண்மைதான். அனைத்து மதங்களிலும் நல்ல கருத்துக்கள்தான் கூறப்பட்டுள்ளது.ஆனால் அதன்படி செம்மையாக வழி நடப்பவர்கள் குறைவு.இதற்கு காரணம் கண்மூடித்தனமான மதநம்பிக்கை.எடுத்துகாட்டாக,சூரியனை பூமி சுற்றுகிறது என்று கலீலியோ கூறிய போது, பைபிளுக்கு எதிரான கருத்து என்று அவருக்கு தண்டனை விதித்தார்கள். இஸ்லாமிய மதம் குடிக்ககூடாது, வட்டி வாங்க கூடாது என்று கூறுகிறது யார் இதை செய்கிறார்கள்.இந்து மதம் அன்பை போதிக்கிறது, ஆனால் செய்திவாசித்தால் அப்படி ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை.ஒரு குடம் பாலை நாசமாக்க ஒரு துளி விஷம் போதும். மதம் மனிதத்திற்கு போதனை அல்ல போதையைத்தான் ஊட்டுகிறது.

 
At 2:01 AM, Blogger Haran said...

மதங்கள் நல்லவற்றினைக் கூறியும் அதனைப் பின்பற்றாது, பிழையான வழியில் நடப்பது மதத்தின் பிழை அல்லவே. அது மனிதனின் அறியாமையைத் தான் காட்டுகின்றது.

மதம், மனிதனது மனத்தினை நெறிப்படுத்தச் சொல்கிறது அப்பொழுது தான் அவனால் தன் ஐம் புலன்களினையும் தன் வசம் கொண்டு வந்து; மனதினை அடக்கி நல் வழி நடக்க முடியும்.

ஆகவே, மதத்தின் பெயர் கூறி தீய வழியில் செல்பவர், மதங்கள் கூறுவதற்கு அமைய அதனைப் பின்பற்றி நல்ல மதவாதியாக நடக்கும் பொழுதே அவன் செம்மையாளனாக வாழ முடியும். அதற்காக கடவுள் நம்பிக்கை அற்றவர்களால் நல்லவர்களாக வாழ முடியாது என நான் இங்கு கூற வரவில்லை.

நான் பெரியாருடைய தீவிர இரசிகன்... அவருடைய கொள்கைகளையும் கோட்பாடுகளுகளையும் நான் ஆதரிக்கிறேன்.

 
At 7:18 AM, Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நீங்கள் கூறுவதை நான் முற்றிலும்; ஏற்றுக் கொள்கிறேன்.
அதனால் தான் "படிப்பது தேவாரம்;இடிப்பது சிவன் கோவிலேனும்" சொல்வழக்கு உருவானது.
சமயச் சடங்குகளில் காலம் கழிக்கும் ;நாம் அதன் தார்மீகம் என்ன? என்பதைப் புரியாததால் வந்த
தவறு.
இந்தியாவில் தயானந்த சரஸ்வதி சுவாமிகளிடம்; அன்பரோருவர் ..;அபிசேகத்துக்கு ஊற்றும் அளவுகணக்கற்ற பாலில் சில லீட்டர்களை; தெய்வச் சிலைகளுக்கு அபிசேகம் செய்து விட்டு; மிகுதிய
அனாதை விடுதிகளுக்கும்; முதியோர் இல்லங்களுக்கும் கொடுக்கலாமே!! எனக் கேட்ட போது;
நல்ல யோசனை என ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் சங்கராச்சாரியார் தலையிட்டு "அபச்சாரம்"
என்று விட்டார்.
இதை என்ன? என்பது...;

 
At 8:18 AM, Blogger கோவி.கண்ணன் said...

ஹரன் இதையும் ...ஆத்திகர் எல்லோரும் சாதுக்களா ? சேர்த்துக் கொள்ளுங்கள் !

ஆத்திகர் எல்லோரும் சாதுக்களா 2?

 
At 8:54 AM, Blogger கானா பிரபா said...

நல்ல தெளிவா எழுதியிருக்கிறீர், நன்றி பதிவுக்கு

 
At 1:22 AM, Blogger Haran said...

//அபிசேகத்துக்கு ஊற்றும் அளவுகணக்கற்ற பாலில் சில லீட்டர்களை; தெய்வச் சிலைகளுக்கு அபிசேகம் செய்து விட்டு; மிகுதிய
அனாதை விடுதிகளுக்கும்; முதியோர் இல்லங்களுக்கும் கொடுக்கலாமே!! எனக் கேட்ட போது;
நல்ல யோசனை என ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் சங்கராச்சாரியார் தலையிட்டு "அபச்சாரம்" என்று விட்டார்//

யோகன் அண்ணா, இப்படியானவர்களால் தான், இந்து மதத்தினர்க்கு இந்து மதம் பற்றிய அறிவு குறைவாக உள்ளது. புராண, இதிகாசங்களில் நல்லது செய், நல்லது நினை, நல்லவை பேசு என்னக் கூறி விட்டு இவர் போன்றோர் இந்து மதத்தின் அடிப்படைத் தத்துவங்களையே மறந்து நடப்பதனால் மதத்திற்கு மட்டும் அல்ல, மனிதர்களையும் இழிவு படுத்துகின்றனர்.

மதத்தினர் அவர்கள் மதம் பற்றிய பிரச்சாரத்தில் ஈடு படாது, பிரசங்கங்களில் ஈடுபட்டால்... அதுவே அவர்கள் மதம் பற்றி மற்றையவர்களுக்கு எடுத்துக் கூறுவதாக அமையும்...

கோவி கண்ணன், மற்றும் பிரபா அண்ணா; நன்றி உங்கள் பின்னூட்டங்களிற்கு.

 

Post a Comment

<< Home