தண்ணீர்... தண்ணீர்... தா...தண்ண்ணீஈஈ...ர்

இக் கட்டுரையினை நான் இங்கு எழுதக் காரணம், தரவுகள் தருவதன் மூலம் உங்களைப் பயப்படுத்துவதல்ல; மாறாக, நம்மைச் சுற்றி என்ன நடக்கின்றன, நாம் அறிந்தும், அறியாமலும், கவன ஈனத்தினத்தின் காரணத்தாலும் நம்மைச் சுற்றி என்னென்ன நம்மால் நடாத்தப்படுகின்றன என்பதனை எடுத்துக் கூறுவதே எனது நோக்கமாகும்.
இன்று உலக வெப்பம் அதிகரித்துக் கொண்டு செல்வதன் காரணமாகவும், மக்களின் தொகை அதிகரித்த வண்ணம் செல்வதன் காரணமாகவும், அருமையான தண்ணீரை நாம் உபயோகிக்க வேண்டி உள்ள அளவு குறைந்தபடியே செல்கின்றது.
உலகில் இருக்கும் நீரின் அளவோ முடிவானது. அதே நேரம் நமது வளர்ந்து வரும் மக்களின் தொகையோ அதிகரித்தபடியே செல்கின்றது; ஆகவே நமது நீரின் பாவனையும் அதன் தேவைகளும் கூட அதிகரித்தவாறே செல்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது, ஒரு நாளிற்கு ஒருவரிற்குரிய குறைந்தளவு நீர் கொள்முதல் அளவானது 50லீட்டர் என. இதுவே குடி நீர், குளியல்/சுத்தம் செய்தல், மற்றும் சமையல் மற்றும் இதர தேவைகளுக்காகப் பயன்படுத்தப் போதுமானதாகும் என ஐ.நா தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த 50 லீட்டர் நீரிலும் குறைவான நீர் கொள்முதலுடன் வாழும் நாட்டு மக்களும் உள்ளதாக அதே ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறாக குறிப்பிட்ட அளவு நீர் கொள்முதல் வசதியே சில இடங்களில் இருக்கின்றன, ஆயினும் அதனைக் கூடச் சில இடங்களில் குப்பைகளைக் கொட்டியோ, அல்லது கழிவுகளைக் கலக்க விடுவதன் மூலமோ அந்த நீரையும் நாம் நாசம் செய்து விடுகின்றோம். இதனால் நீரின் மூலம் பரவும் கொலரா, மலேரியா, வாந்திபேதி போன்ற நோய்களை நம்மை அறியாமலேயே அந்த நீரை உபயோகிப்பவர்களுக்கு நாம் ஏற்படுத்துகின்றோம்.

அதே போன்று, குளிக்கும் பொழுது பொதுவாக நாம் ஊரில் கிணற்றில் வாளி போட்டு அள்ளிக் குளித்துப் பழகி, எப்படிக் குளித்தாலும் எமக்கு நிறைவு இருக்காது. அதனால் பலரும் மணித்தியாலக் கணக்கில் குளிப்பதனை நான் கண்டிருக்கின்றேன், ஏன் நான் கூட நீர் பற்றி ஒரு விளிப்புணர்வு வரும் வரை அவ்வாறு செய்திருக்கின்றேன். ஒரு 5 நிமிடத்தில் உங்களது குளியலைத் தாராளமாக முடிக்கலாம் என்பது எனது எண்ணம் மட்டும் அல்ல ஆராய்ச்சியாளர்களும் இதனையே செய்யுமாறு அறிவுறுத்துகின்றனர். அதே போன்று, குளிக்கும் பொழுது சவற்காரத்தினை நாம் பாவிக்கையில் நீர் வழிந்து தேவையற்று விரயமாவதைத் தடுப்பதற்காக அதனை நிறுத்தி விட்டு நாம் சவற்கரத்தில் உடலில் போடலாம் தானே?
மற்றும், சிலர் பல் துலக்கும் பொழுதும், முகச் சவரம் (shaving) செய்யும் பொழுதும், சமையற் பாத்திரங்கள் கழுவும்பொழுதும் நீர் வரும் குழாயினைத் திறந்தவாறு விட்டே தமது வேலைகளைச் செய்கின்றார்கள். தமக்குத் தேவையான அளவு மட்டும் எடுத்துக் கொள்ளாது நீரை வீணாக்குகின்றார்கள்; அத்துடன் கார் கழுவுதல், வீட்டுப் பூஞ் செடிகளிற்கு நீர் இறைத்தல் போன்ற மேற் குறிப்பிட்ட விடயங்களினால் நீர் விரயமாகும் விகிதம் அதிகம் என நான் வாழும் நாட்டு அரசினர் அடிக்கடி கூறித் தொலைக்காட்சியிலும் அது பற்றி விளிப்புணர்வு வருவதற்காக விளம்பரங்கள் செய்கின்றார்கள்.
நாம் நீரினைத் தேக்கி வைத்துப் பாதுகாத்து அதனை உபயோகிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். உதாரணமாக: நீர் தேக்கும் தொட்டிகளினை வீட்டில் அமைத்துக் கொள்ளலாம், அதனை இங்கு நான் வாழும் நாட்டு அரசு மிகவும் ஆதரித்து அதற்கு நிதி உதவி கூட வழங்குகின்றது. ஆகவே பண்டைய காலங்களில் மன்னர்கள் குளங்கள், மதகுகள் எனக் கட்டி நீரைத் தேக்கியது போல, நாமும் இக் காலத்திற்கும் பிரதேசங்களிற்கும் ஏற்ற முறையில் ஏதாவது செய்யலாம், செய்து நீரைத் தேக்கி அதனை நமது இதர செயல்களுக்குப் பாவிக்கலாம் என்பது எனது கருத்து.
இது கூட நாம் செய்யாவிடின், எமக்குப் பின் வரும் சந்ததியினர் ஒரு துளி நன்னீர் எடுக்கக் கூட மிகவும் அலைந்து திரிய வேண்டிய நிலை உருவாகும்; அவர்களுக்கு நம்மால் ஒரு பாலைவனத்தினை மட்டும் தான் பரிசாகக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். அவர்களிற்கு இந் நிலையினை ஏற்படுத்த நாமே காரண கர்த்தாக்களாகவும் அமைந்து விடுவோம். நானிங்கு நடப்பவற்றினைக் கூறியுள்ளேன்... முடிவு எடுக்க வேண்டியவர்கள் நல்லது கெட்டது தெரிந்த தனி மனிதர் ஒவ்வொருவருமே.

16 Comments:
நல்லா ஆராய்ஞ்சு எழுதியிருக்கிறீர், தண்ணீரை மிச்சம் பிடிக்கிறேன் எண்டு குளிக்காமல் இருக்கக் கூடாது
பிரபா அண்ணா,
என்ன இருந்தாலும் நீங்கள் இப்பிடி எண்டதுக்காக எல்லாரையும் இப்பிடி நினைச்சுப் போடக் கூடாது...காந்தித் தாத்த சொன்ன மாதிரி, தன்னையும் பிறர் போல் நினை என்பதை இதில் நீங்கள் கடைப்பிடிக்கக் கூடாது. காந்தி தாத்தா சொன்னதை எவை செய்யினமோ இல்லையோ நீங்களாவது செய்யிறதை பார்க்க சந்தோசமாய் இருக்கு, ஆனாலும் இந்த விடயத்தில் தன்னைப் போல் பிறரையும் நினை என்பது தான் கொஞ்சம் இடிக்குது:P
நல்ல பதிவு.
எதையும் விரையமாக்க வேண்டிய அவசியமில்லை. ஊரில் அதாவது ஈழத்தில் வாழ்ந்த போது கிணற்றில் அள்ளியே தண்ணீரைப் பாவிப்பதால் அதன் அருமை தெரியாமலே இருந்தது.
அள்ளி அள்ளி ஊற்றினோம். வெளிநாட்டுக்கு வந்த போது தண்ணீரைச் சிக்கனமாகப் பாவிக்கவே தெரியாவதவர்களாய் இருந்தோம்.
தொடர்ந்த காலங்களில் தண்ணீருக்கான கட்டணமும் , தண்ணீரை வெளிநாட்டவர்கள் சிக்கனமாகப் பாவிக்கும் முறையும் எம்மை மாற்றி விட்டது. இப்போது சிக்கனமாகப் பாவித்துப் பழகியும் விட்டோம். இல்லாவிட்டால் தண்ணீருக்கான கட்டணத்தைக் கட்ட பிறிம்பாக வேலை செய்ய வேண்டி வரும்.
அவுஸ்திரேலியாவில் நின்ற போது அவர்கள் முறை வைத்து நாட்கள், நேரங்கள் என்று பார்த்து மரங்களுக்குத் தண்ணீர் விட்டதைக் கவனித்தேன். பின்னர் லண்டனிலும் அதே முறை இருந்ததைக் கவனித்தேன். ஜேர்மனியில் இன்னும் இத்தனை இறுக்கம் வரவில்லை.
ஆனாலும் எல்லோரும் இதைக் கவனத்தில் எடுத்து செயற்பாட்டால் நல்லதே என்பதை உங்கள் கட்டுரையும் விளக்குகிறது. இந்தக் கட்டுரையை இணையத்துடன் நிறுத்தி விடாமல் ஏதாவது பத்திரிகைகளுக்கும் கொடுங்கள். இணையத்தைத் தரிசிக்காத மக்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் கவனத்துக்கும் இக்கட்டுரை சென்றால் நல்லது. பயனானது.
சந்திரவதனா அக்கா... நிச்சயமாக... நாம் எதனையும் விரயம் செய்யக் கூடாது என்பதே எனது எண்ணமும்... எதற்கும் அதன் அருமை தெரிந்து நடக்க வேண்டும்.
இங்கு அவுஸ்ரேலியாவைப் பொறுத்தவரை தண்ணீர்க் கட்டணம் என்பது மற்றைய கட்டணங்களுடன் பார்க்கும் பொழுது மிகக் குறைவே...
இங்கு கார் வீட்டில் வைத்துக் பைப்பில் இருந்து நீர் எடுத்துக் கழுவினால் அதற்குக் குற்றப் பணம் கட்டும் முறை உண்டு. ஒரு வாளியில் தண்ணி எடுத்தோ அல்லது சிறிய அளவிலான தண்ணி கொண்டோ கார் கழுவ வேண்டும் என்பது இங்கு சட்டம்.
அவுஸ்ரேலியாவில் தண்ணீரின் மட்டம் மிகவும் குறைந்துகொண்டே வருவதால் தான் இவ்வாறான கெடுபிடிகள். உலகெங்கும் இதே பிரச்சனை இப்பொழுது கொஞ்சங் கொஞ்சமாக ஆரம்பமாகி உள்ளது.
அண்மையில் கூட இங்கு ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை வாசித்தேன்... நாம் வெளிவிடும் காபன் சேதாரத்தினை ஈடு செய்ய அவுஸ்ரேலியாவில் வாழும் ஒவ்வொருவரும் ஆளுக்கு 700 மரங்கள் நட்டாலே சமப்படும் என அக் கட்டுரையில் எழுதி இருந்தார்கள்... ஆனால் நாம் ஒவ்வொருவரும் ஆயுளில் ஒரு மரம் கூட நடுவதில்லை.
பத்திரிகைக்கு எனது ஆக்கத்தினைக் கொடுக்க முயற்சிக்கின்றேன். உங்கள் ஊக்கத்திற்கும் கருத்துக்களுக்கும் எனது நன்றி.
ஹரன்!
நல்ல தேவையான ஆக்கம்!!!இதை எத்தனைபேர் பின்பற்றப் போகிறார்கள். எல்லோரும் "கிளியோப்பற்றிரா
குளிக்கக் கழுதைப் பால்" கொண்டு சென்றவர் மனநிலையில் இருக்கிறார்கள்.
ஒன்று , ஈழத்தில் கிணற்றுத் தண்ணீர் எவ்வளவு நீங்கள் அள்ளி செலவு செய்த போதும்; வெளியேறும் கழிவு இயற்கையாக வடிக்கப்பட்டு மீண்டும் பெரும் பகுதி கிணற்றுக்கு வரும் வரும் வாய்ப்பு இருந்தது.
ஆனால் பெருநகரங்கள் கழிவுநீரை அப்படியே ஆறுகளுள் அல்லது நீர்நிலைகளில் திசைதிருப்புவதால்
அவை மாசாகி மீண்டும் பாவிக்கும் நிலையை இழப்பது மிக வேதனை.
50 வருடங்களுக்கு முன் பாரிஸ் செயின் நதியில் குளித்துள்ளார்கள்.இன்று அந்த நிலையை இழந்து விட்டது. உலகம் பூராகவும் இப்படியே!!
நாம்" நனைத்துச் சுமப்பவராக" மாறிவிட்டோம்.
நான் வீட்டில் பூச்சாடிகள் வைத்துள்ளேன். அவற்றுக்கு வாரம் சுமார் 30 லீட்டர் நீர் தேவை; அதற்கு இப்போ மரக்கறி கழுவும் நீரைச் சேகரிக்கிறேன். என் மனைவி மிக உதவுகிறார்; சிரமம் இருந்தபோதும்.
ஆனால் நண்பர்கள் வந்தால் நமட்டுச் சிரிப்புச் சிரிப்பார்கள். காரணம் "பணம்???மிச்சம் பிடிக்கிறோமே!!" எனும் தவறான எண்ணம்.
//நான் வீட்டில் பூச்சாடிகள் வைத்துள்ளேன். அவற்றுக்கு வாரம் சுமார் 30 லீட்டர் நீர் தேவை; அதற்கு இப்போ மரக்கறி கழுவும் நீரைச் சேகரிக்கிறேன். என் மனைவி மிக உதவுகிறார்; சிரமம் இருந்தபோதும்.
ஆனால் நண்பர்கள் வந்தால் நமட்டுச் சிரிப்புச் சிரிப்பார்கள். காரணம் "பணம்???மிச்சம் பிடிக்கிறோமே!!" எனும் தவறான எண்ணம்//
நன்றி யோகன் அண்ணா, நீங்கள் பூச்செடிக்கு எவ்வாறு தண்ணீர் ஊற்றுகின்றீர்கள் என்பதனைக் கேட்கும் பொழுது மிகவும் சந்தோசமாக உள்ளது. இவ்வாறே நாம் பல விடயங்களுக்குப் பயன்படுத்திய நீரைப் பாவிக்கலாம்.
நன்றி உங்கள் கருத்திற்கும் பின்னூட்டத்திற்கும்.
அருமையான பதிவு. எம்மில் பலருக்கு தன்ணீரின் அருமை தெரிவதில்லை.
இதுபோல் நிறைய எழுதுங்கள்.
ஆதிபகவன்,
உங்களது கருத்திற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
ஹரன்
தண்ணீர் அது வளர்ந்த நாடுகளில் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தில் கூட தண்ணீர் பிரச்சனைக்குரிய ஒன்றாக தான் மாறி வருகிறது. கிணறில் தண்ணீர் நிற்பது முக்கியமால்ல அது தரமான நீரா என்பது தான் கேள்வி.
மற்றும் படி குளிக்கும் போது பூட்டி விட்டு குளிக்கலாம். பிறகு திரும்ப சுடுதண்னியையும் குளிர் நீரையும் சரியான கலவையில் கொண்டுவரும் அலுப்பு இருக்கிறதே :)
நல்ல கட்டுரை ஹரன்..பிரபாண்ணா:-))
பைப் தண்ணி எடுத்துக் கார் கழுவினா பைன் கட்டணுமா அப்ப எங்கட வீட்ட அப்பாவும் அக்காட மகனும் சேர்ந்து ஜீப் கழுவுறதுக்கு எவ்வளவு பைன் கட்டவேண்டி வரும்.
படங்கள் நல்லா இருக்கு!
யாழில் தண்ணிப் பஞ்சம் சில இடங்களில் உண்டு. எமது ஊரில் எம் வீட்டில் சவர்த் தண்ணீர் (மஞ்சள் நிறத்தில் தண்ணீர்) பின்பு குளாய் அடித்து, நல்ல நீர் வரும்படி செய்வித்தோம்.
குழாயிலிருந்து நேரடியாக நீர் எடுத்துக் கார் கழுவக் கூடாது, வாளியில் நீர் எடுத்துத் தான் கார் கழுவ முடியும்... அல்லது.. கார் கழுவுமிடங்கள் சென்றால் அங்கு தாராளமாகக் கார் கழுவலாம் - ஏன் எனின் அது மீழச் சுத்தீகரிக்க்ப்பட்டுத் திரும்பத் திரும்ப வரும் (recycle water)
வி.ஜெ, சினேகிதி... நன்றி.
சினேகிதி...
படங்கள் நல்லாய் இருக்கு எண்டிட்டு பிறகு என்னட்டை இருந்தே சுடக்கூடாது:P ;)
நீர் குளிக்காமல் டபாய்பதற்கு இதுதானா ஹாரணம் ஹரன் என்ன குழ்ப்பமாக இருக்குதா யாரென
ஈழவன்
//நீர் குளிக்காமல் டபாய்பதற்கு இதுதானா ஹாரணம் ஹரன் என்ன குழ்ப்பமாக இருக்குதா யாரென
ஈழவன்//
அது சரி... மவனே... உங்களை மாதிரி எல்லாரையும் நினைக்கக் கூடாதுங்கோ... யேசு நாதர் சொன்னதை எவன் பின்பற்றுகிறானோ இல்லையோ நீங்கள் பின்பற்றுறதை பார்க்க சந்தோசமாய் இருக்கு... நான் சொன்ல்லுறது " தன்னைப்போல் பிறரையும் நினை என்பதை"
;)
இங்கு எழுதி இருப்பது உமது சொந்த கதை என்பது எனக்கு நன்கு தெரியும் அதாவது குளிக்கும் பஞ்சியில் இப்படி ஒரு வியாக்கியானத்தை கொடுத்து இருகிறீர் நீர் குளிப்பதில்லை என்பதற்கு நான் சாட்சி கரன்.
ஈழவன்
பப்ளிக் பிளேசில வந்து இப்பிடி அசிங்கப்படுத்தக்கூடாது.... பிறகு அழுதிடுவன்.
Post a Comment
<< Home