அன்புக்குமுண்டோ அடைக்குந்தாள்?

அனேகமானவர்கள் நம்புவது, எந்தவொரு உறவு முறையிலும் ஒரு 'நம்பிக்கை' என்பது ஒவ்வொருத்தரும், பொய் சொல்லாது ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவர்களாக நடந்து கொள்வது என்று எண்ணுவார்கள். ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால் நீ உனக்கு உண்மையுள்ளவனாகவும், நீ நீயாகவும் எப்போதும் அந்த விரும்பியவளுடனோ/ விரும்பியவனுடனோ நடந்து கொண்டாயானால் அதுவே உண்மையான உன்னை, உன் உறவுவினை நேசிக்க வைக்கும். காதல் என்பது வெளியில் ஒன்றாகச் சுற்றித் திரிவதிலோ, ஒருவருக்கொருவர் பூ (றோசாப் பூ) கொடுப்பதிலோ, பரிசுகள் கொடுப்பதனாலோ, அல்லது அழகாய் இருப்பதனாலோ அல்லது முத்தங்கள் கொடுப்பதால் மட்டுமோ வருவதன்று... என்னைப் பொறுத்தவரையில், இது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக் கூடிய சுழ்நிலையை ஏற்படுத்தி ஒருவரைப் பற்றி முழுமையான உணர்வை மற்றவனுக்கோ/ மற்றவளுக்கோ எடுத்து இயம்பக் கூடியதாக இருக்க வேண்டும், அதுவே ஒருவர் மற்றவருக்கு, ஆசானாகவும், உற்ற நண்பனாகவோ/ நண்பியாகவும், ஆலோசகராகவும் இருக்கச் செய்யக் கூடியதாக அமைய வேண்டும்.

நாம் அனைவரும் ஒரு அவசரமானதும், வேகமானதுமான வாழ்க்கையினைக் கொண்டு நடத்துகின்றோம், ஆகவே பொதுவாகவே எம்மைச் சுற்றி என்ன நடக்கின்றன என்பதனை அவதானிக்கத் தவறி விடுகின்றோம். இவ்வாறே எம் வாழ்வானது தொடரின் நாம் நிறைய விடயங்களை இழக்க வேண்டி வரும். ஆகையால் நடந்து வந்த பாதையினைத் திரும்பிப் பார்ப்பதும், நமக்கு உதவியவரை நினைபதும் மிகவும் முக்கியமானது. நாம் இதுவரை செய்த விடயங்களினையும், இனி என்ன செய்ய வேண்டும் என்பதனையும் ஆராய்ந்து செயற்பட வேண்டும்.
ஒரு வேலையினைக் கடின உளைப்புடன் செய்வதால் மட்டும் அதில் பயன் நமக்கு வந்து விடாது என்பது எனது நம்பிக்கை. கடின உளைப்புடன் கூடிய செய்யும் விடயத்தில் ஆர்வமும், நம்பிக்கையும், விருப்பமும் இருத்தல் என்பது மிகவும் முக்கியமானதாகும். அதுவே எமக்கு வெற்றிகளை ஈட்டித் தரும்.
அனைவரையும் மதித்தும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும். ஒருவர் இருக்கும் போது அன்பாக நடக்காது நாம் அவரை இழந்த பின்பு நினைத்து அழுவதால் என்ன பயன்? ஆகவே யாரும் நம்முடன் இருக்கும் பொழுது அன்பாக அவர்களுடன் நடக்க வேண்டும் என்பது எனது எண்ணம். எவ்வாறு அப்படி நடப்பது என்று எண்ணினால், நாளை நான் உயிருடன் இல்லாது போனால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்கும் பொழுது, நமது ஆணவம், அகந்தை (ஈகோ), மற்றும் பிடிவாதம் அனைத்தும் எம்மை விட்டுப் போகும்; அப்பொழுது நாம் அனைவரிடமும் மரியாதையுடனும், பக்குவமாகவும் நடந்து கொள்ளத் தொடங்குவோம். நாம் உண்மையாகவே வெறுக்கும் ஒருவருடன் இவ்வாறு நடந்து பார்த்தால், நாமே நடப்பதனைப் பார்த்து வியப்படைவேம். இது கடினமான விடயமே தவிர, முடியாத விடயமல்ல.
மனித வாழ்வில் நான் என்ற அகந்தை ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. சிலர் எண்ணுவார்கள் தாம் என்ன செய்தாலும் மற்றவர்கள் அதனைக் கவனிக்க மாட்டார்கள், ஆகவே தாம் எதுவும் செய்யலாம் எவரையும் எப்படியும் நடத்தலாம் என்று, ஆனால் எவருமே முட்டாட்களல்ல. பொதுவாகவே பலரும் பிழை செய்தவர் முன் சென்று, நீ பிழை செய்து விட்டாய் என்று வாதிட்டுக் கொண்டு இருக்க விரும்ப மாட்டார்கள். ஏன் எனின், இவரிடம் வாதிட்டு ஒரு பயனும் இருக்காது, அத்துடன் இதைச் சொல்லி ஏன் அவர் மனதைக் புண் படுத்த வேண்டும் என்று விட்டு விடுவார்கள். ஆனால் யார் முன்னும் வந்து நீ செய்த விடயம் பிழை என்று கூறுபவர்கள் பொதுவாகவே உன்னை உண்மையாக நேசிப்பவர்களாகவும் உண்மையாக நடப்பவர்களாகவும் இருப்பார்கள். என்ன என்னால் விளங்கிக் கொள்ள முடியாது இருக்கின்றது என்றால், சுடு வார்த்தைகளால்... நானே பெரியவன்... நான் சொல்வது மட்டுமே சரி என்பதனை நிச்சயப்படுத்துவதற்காக நடத்தப்படும் பேச்சுப் பிடுங்கலில் அனேகமானவர்கள் தம்மில் உண்மையாக அன்பு செலுத்துபவர்களையும் உண்மையான நண்பர்களையும் இழந்து விடுகின்றார்கள். நட்பு என்பது ஒரு அரிய உறவு, அதாவது எமது வாழ்வில் அனைத்துச் சொந்தங்களும் ஏற்கனவே இறைவனால் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன, ஆனால் நண்பர்களை மட்டுமே நாம் தேர்ந்தெடுக்கின்றோம். இவ் வகையில் நமக்கு வரும் மனைவியோ/ கணவனோ கூட நம் நண்பர்களே என்பது எனது கருத்து.
நாம் ஒவ்வொரு முடிவுகளையும் எமக்கு வாழ்வில் நடந்த அனுபவங்களையும், எம்மைச் சுற்றி நடப்பவற்றையும் எமது பெற்றோரால் நம்மில் ஏற்படுத்தப்பட்ட சில கலாச்சார, பண்பாட்டு நம்பிக்கைகளையும் வைத்தே எடுக்கின்றோம். சிலவேளைகளில் அனைவரிலும் அன்பு செலுத்துவது என்பது சொல்லளவில் மட்டும் செய்யக் கூடிய ஒன்றாக இருக்கும், அனைவரிலும் அன்பு செலுத்துவது என்பது மிகவும் கடினமான விடயம், அத்துடன் சிலர் அவர்கள் செயல்கள் மூலம் அன்பு செலுத்தவே தகுதி அற்றவர்களாக இருப்பார்கள்; ஆனால் நாம் அனைவருமே இறைவன் படைப்பில் வித்தியாசமானவர்கள் என்பதனை நாம் ஏற்போமானால், மற்றவர்கள் மற்றவர்களாகவே செயற்படுகிறார்கள் என்பதனை எம்மால் ஏற்கக் கூடியதாக இருக்குமானால், மற்றவர்கள் செய்யும் விடயங்களை எம்மால் குறைந்தது சகித்துக் கொள்ளக் கூடியதாக ஆவது இருக்கும்.
நாம் அனைவரும் மறக்காமல் இருக்க வேண்டியது யாரும் கெட்டவனாகப் பிறப்பதில்லை, அதே வேளை ஒவ்வொருவரின் வாழ்விலும் எப்போதாவது மாற்றங்கள் நிகழ்ந்தவாறே இருக்கும்; ஏன் எனின் இன்று சரியாக நமக்குத் தெரிந்த விடயம் நாளை சில வேளைகளில் பிழையாகத் தெரியும்... அவ்வாறே நேற்றுப் பிழையாகத் தெரிந்த விடயம் இன்று சரியானதாகப் படும். நாம் வாழும்போது வாழ்வில் நிரந்தரமான ஒரே விடயம் என்றால் "மாற்றங்கள்" மட்டுமே அத்துடன் நம் 'பிறப்பு' நிச்சயமற்றது... நாம் எங்கு எப்பொழுது எப்படிப் பிறப்போம் என்று யாருக்கும் தெரிவதில்லை, ஆனால் நமது 'இறப்பு' என்பது ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக நடைபெற இருக்கும் விடயமே. ஆகவே நாம் இவ்வுலகில் இருக்கும் சிறிய காலத்தில், போலிப் பகட்டிற்காக மற்றவர்களுடன் போட்டி, பொறாமையுடன் வாழாது மற்றவர்கள் மீது அன்பு செலுத்திச் சந்தோசமாக வாழ வேண்டும் என்பது எனது எண்ணம்... நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்??
*********** இப் பதிவு முன்பும் என்னால் இடப்பட்டது**************
5 Comments:
மிகவும் நல்ல அத்தமுள்ள பதிவு.
நீங்கள் சொல்லியுள்ள பலவற்றை
நடைமுறையில் பின்பற்றுவதென்பது முடியாத விசயங்களாகும். அப்படியில்லை என்று
நடைமுறைபடுத்தப் போனால் வெறும் நடிப்பாகத்தான் முடியும்.
வெறுப்புடன் பழகும் போது ஒருவருக்கு ஆத்திரமும், ஆவேசமும் கூடி வெறுப்பு அதிகமாகி பிரிவினைக்கே வழிவகுக்கும்.
அன்பு என்பது உண்மையுள்ளவர்களிடம் மட்டும் தான் இருக்கும். உண்மை வேறு அன்பு வேறு இல்லை.
நான் கூறியவற்றில் பலவற்றை நடைமுறையில் பின்பற்றுவது "முடியாத விடயங்கள்" என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இதையே "கடினமான விடயம்" எனக் கூறினால் அதுவே எனது கருத்துமாகும். நான் எழுதிய விடயங்களில் எனக்கு முழுவதும் நம்பிக்கை உண்டு... யதார்த்த வாழ்விலும் அனுபவித்திருக்கின்றேன்.
வெறுப்புடன் ஏன் பழக வேண்டும்... ஒருவரை உங்களுக்குப் பிடிக்கவில்லை எனின்... அவருடன் அமர்ந்திருந்து... பேசி ஒரு முடிவிற்கு வரப்பார்க்க வேண்டும்... அதை விடுத்து.. வாக்குவாதம் விதண்டாவாதம் பேசுவதும்... அவரின் முதுகிற்குப் பின் பேசுவதும் நிலமையினை இன்னும் மோசமாக்கும். அப்படி அவருடன் இருந்து பேசியும் வெறுப்பு/ பிரச்சனை தீரவில்லை எனின்... சந்தோசமாக இருவரும் பேச முடியாது எனத் தெரிந்தால்... இருவரும் ஒருவரில் இருந்து ஒருவர் ஒதுங்கி வாழ்வது நல்லது என்பது எனது கருத்து.
அன்பு என்பது உண்மையானவர்களிடம் மட்டும் இருக்கும் என்பது மிகவும் உண்மையான விடயம்... ஆயினும் உண்மையானவர்கள் மீது நமக்கு முதலில் ஒரு மதிப்பு/ நம்பிக்கையே அதிகமாகும்... அவ்வாறு உண்மையானவருடன் பழக நேரும்போது தான் அன்பு உருவாகும். ஆயினும் நாம் பொதுப்படையாகக் கூறும் "அன்பு" உண்மையானவர்கள் அனைவரிடமும் இருக்கும் என்று எண்ணுகின்றேன்.
நன்றி உங்கள் கருத்துப் பகிர்விற்கு..
haran,
மிகவும் தெளிவானதும் ஆழமானதுமான ஒரு கட்டுரை. நான் எழுத எண்ணியதை அப்படியே எழுதுவிட்டீர்கள். நான் வலைப்பதிவுக்கு புதிது. என் மனதிலும் பலவற்றையும் எழுத வேண்டும் என்ற அவா. போதிய நேரம் கிடைக்காததால் முடியவில்லை. "ஜால்றா அல்லது காக்கா பிடித்தல்" என்பதைப் பற்றி ஒரு கட்டுரை தாருங்களேன். ஒரு சிலர் காக்கா பிடித்தலை அன்பு என்று எண்ணி உண்மையான அன்புள்ளவர்களை தொலைத்துவிடுகிறார்கள். "மனம் போல வாழ்க்கை என்பார்கள்".
karuran...
உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி.
இன்னும் எழுத ஆசை தான்... ஆயினும் தற்பொழுது கொஞ்ச நாட்களாக நேரம் கிடைப்பதில்லை... என்னால் முயன்றவற்றை எழுத முயற்சிக்கின்றேன்.
நல்ல பதிவு.
Post a Comment
<< Home