தமிழில்

எனது தமிழ் ஆக்கங்களினை இப் பதிவில் நீங்கள் பார்க்கலாம்... எனது ஏனைய பதிவுகளைப் பார்ப்பதற்கு "View My Complete Profile" இனை அழுத்தி வேண்டிய பதிவினைத் தெரிவு செய்க.

Wednesday, September 13, 2006

கவிதைகள்

***இக் கவிதையை நான் 10ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த பொழுது எழுதியது:

மானிடர்

அங்காடி நாயவர்கள்
அல்லலுறும் மானிடர்கள்
அல்லும் பகலும்
அர்த்தமற்ற அலட்டல்கள்

கூடி ஆடுவர் பாடுவர்
கூள் குடிக்க வழியின்றேல்
ஓட ஓட விரட்டுவர்
ஓடிய பின்பும் துரத்துவர்
இன்பம் பெறுமிடத்தில்
இலத்தியாய் ஒட்டிக்கொள்வர்
துன்பத்தில் துடிக்கையிலே
தூரப்போய் துஷ்டா என்பர்
நண்பன் என்பர் அண்ணனென்பர்
உன் அன்பன் என்பர்
ஆஸ்தி கெடும் போது
அடச் சீ என்பர்
துடிப்புடன் வாழ்கையிலே
துரத்தித் துரத்தி நண்பனென்பர்
துன்பத்தில் துடிக்கையிலே
தூரத் தூரச் சென்றிடுவர்

தம் பிழையை எண்ணாது
பிறர் பிழையை விமர்சிப்பர்
தகவலலற்றும் திட்டுவர்
பின் தம் வேலை பெறுவதற்காய்
தரணியில் உன் போல்த்
தார்ப்பரியம் உள்ளவரில்லை என்பர்
என்ன செய்ய இத்ற்கு?

மனிதன் கூறுகிறான்:
"உலகைப் பார்க்க எனக்கு
பிடிக்கவில்லை" என
உலகம் கூறுகிறது:
"மனிதனைப் பார்க்க எனக்கு
பிடிக்கவில்லை" என



***இக் கவிதை ஊரிலிருந்து இடம் பெயர்ந்து வன்னியில் இருந்த பொழுது எழுதியது (அப்பா எங்கே எனும் விடயம் தெரியாதிருந்த பொழுது எழுதியது):

விடியலைத் தேடி

நாடோடி வாழ்க்கையிது
நம்பாத வாழ்வுமிது
காடோடித் திரிந்திட்டே
காசால் வாழ்கின்றோம்
எங்கோ என் தந்தை
எங்கோ என் அண்ணர்
எங்கே சென்றாரோ
இங்கே வந்தாரோ
யாரோடு பேசிடுவோம்
நாம் படும் அல்லலினை
தடுமாறும் மனத்துடனே
தமிழ் மானக் கனவு கண்டு
தரணியிலே எம் விடிவிற்காய்
ஏங்கி நிற்கின்றோம் நாம்


***இக் கவிதை அவுஸ்திரேலியா வந்து சில வாரங்களில் எழுதியது:

தமிழனின் தலைவிதியா?

மர மனங்களின் மத்தியிலே
மரணித்த உணர்வுடனே
தனி மரமாய் நிற்கின்றேன்
என் தனிமையால் தவிக்கின்றேன்
தமிழனென்று பிறந்து விட்டால்
தரணியிலே இக் கதியா?
உற விழந்தோம்
உறைவிடம் இழந்தோம்
ஆன உணவிழந்தோம்
பணமும் இழந்தோம்

பறவாயில்லை......!!!
இவற்றை எங்கும் தேடலாம்
ஆனால்...........!!!
உற்றாரும் உறுதுணை நண்பரையும்
இனிச் செத்தாலும்
பெற முடியாதே....

தமிழனுக்கு இந்தச் சாபம்
ஏன் இறைவா?

குற்றமே செய்யாதவரைத்
தண்டித்துக் குதூகலிக்கும்
அரக்கனா நீ?
இல்லையே இறைவா - உன்
வரைவிலக்கணம் கூட
அன்பே மயமான அருளாளனன்றோ
நிதம் கலங்கித்
தினம் துவண்டு
மனம் வெதும்பிச் சாவதே
தமிழனின் தலைவிதி என
நீ எழுதியிருப்பின் - உன்னைத்
தவிர யாராலதை மாற்ற முடியும்



16 வயதினிலே

நான் கொட்டக் கொட்ட
முழித்துன்னைப் பார்க்கையில்
நீ எட்ட எட்டப்
போய் மருள்வதில்
நியாயம் இருக்கிறது
எனெனின் நீ மானல்லவா

ஏன் கொட்ட
விழிக்கிறேன் என
என் கிட்ட
வந்து கேளேன் நீ

என் கண்ணில்
பதிந்த உன் உருவம்
என் கண்ணிமைப்பால்
பாதிப்படைந்து விடுமோ
என்ற பயந்தான்
வேறொன்றுமில்லைக் கள்ளி



****இக் கவிதை நான் அவளில் காதல் வளர்த்திருந்த போது 1997ல் எழுதியது.... இக் கவிதையினை நான் இப்பொழுது இங்கு எழுதக் காரணம், அவளில் உள்ள நினைப்பாலல்ல; காதலில் நான் வைத்திருக்கும் மரியயதையே...

காதல் அவஸ்தை

மனதில் உன் நினைவு
கொடுக்கும் வேதனைகள்
உதைக்கும் இதயத்தை
உன் நினைவின் வேதனை கூட
சுகம் தானடி, சுகந்தங் கூட....
அதனால் தானோ என்னவோ
இன்னுமுன்னை என் மனதில்
வைத்துப் பூசிக்கிறேன்
உன் நினைவுகள் நீங்காத
தழிம்புகளாய் என் மனதில்
என் கண்ணில் நீர் வழிந்து
உதட்டில் விழுகையில் கூட
உன் முத்தமாய் எண்ணிச்
சந்தோசங் காண்கிறேன்!

ஏனடி எறிகணையாய்
உன் கண்ணை என்மீது வீசி
என்னைக் காயப் படுத்திவிட்டு
நீ மட்டும் சந்தோசிக்கின்றாய்
ஏனடி சிரித்து என்னிதயத்தைப்
பறித்து விட்டுத்
திருப்பித் தர மறுக்கிறாய்?

ஓ.............
இதயமின்றி எவ்வாறு இயங்குகிறேன்
என்று பார்க்கிறாயா?
உன் நினவுகள் தான்
என் நாடித் துடிப்புகளாகி
இன்று என் இதயத்துள்
ஒலித்துக் கொண்டிருக்கின்றன
பரீட்சை முடியட்டும்
என்றிருந்தது சில காலம்
கேட்டு மாட்டே னென்றாயானால்
என்று கலங்கியது சில காலம்
உன் இடம் தேடி
அலைந்ததும் சில காலம்

அதனால் என் மனதில் உனக்கிடமும்
சிலகாலமென்று எண்ணி விடாதே.......
ஆம் என்றாயானால்
ஆயுழுக்கும் நீதானடி எனக்கு
இப்போதென் கலக்கமென்ன
தெரியுமா உனக்கு?
உன் பதிலென்னவோ
என்பது தானெனக்கு
ஏனடி?............
ஏனடி எனக்கிந்த
அவஸ்தை வர வேண்டும்?



***இக் கவிதை வன்னி சென்று வந்த பின்பு எழுதியது.....

நம்மவர்

விடுதலைக்காய் ஏங்கி நிற்கும்
ஆலை மரங்கள் ஈழத் தமிழர்
வேர்கள் பெயர்க்கப்பட்ட போதும்
விழுதாகிய வெளிநாட்டவரால்
மீண்டும் துளிர் விட்டு எழுகின்றனர்
ஓர் நம்பிக்கையுடன்

அன்று கேட்பார் யாரும் இருக்கவில்லை
ஆறுதலும் கிடைக்கவில்லை
நம்மவரோ என்ன செய்வர்?
அங்கு அழுகையே தேசியகீதம் ஆகியதால்
குளறுவதே அரைக் கம்பக் கொடியின்
அடையாளம் ஆகிப் போனது
அவலக் குரல் தேசிய மொழி ஆகியதால்
அங்கு பேசுவதோ இரண்டாம்
மொழி ஆக்கப் பட்டது

இந் நிலைகள் இன்று
இறந்த காலம் ஆகி விட்டன
ஆயினும் போரின் தழிம்புகளாய்
உலகில் பின் தங்கி விட்டனர் நம்மவர்

மர நிழலே பள்ளிக்கூடமான போதும்
மரணிக்கா உணர்வுடனே மாணாக்கர்கள் அங்கு
எங்கும் ஓர் எதிர் பார்ப்பு
உலகில் நாமும் எழுந்து நிற்போமென்ற நம்பிக்கை
ஆயினும் ஆண்டாறு படிப்பவர்
ஆறு வயதிற்குரிய வளர்ச்சியுடன் அங்கு

எம்மவர் கதை கேட்டால்
உலகத் தாயே ஓ... என்றழுதிடுவாள்
ஒரு தோப்புக் கிளிகள் நாம்
நம்மவர் நலிந்து போக
நாமும் விடலாமோ
எம் மக்கள் நாங்களெல்லாம்
முன் வந்து தோள் கொடுத்தால்
நடந்த கொடுமை எல்லாம்
தூசி போல் துடைத்திடலாம்



***மாவீரர் நாளன்று எழுதியது:

காவல் தெய்வங்கள்

மா வீரரே....
என்றும் எம் கண் கண்ட
காவல் தெய்வங்களே
இஃதறியா மூடர்
விண்ணி லென்பர் தெய்வம்
எங்குமென்பர் தெய்வம்
ஒன்றையும் காணாமலே

நாமெல்லாம் சுக வாழ்வைச்
சுய நலத்தோ டெண்ணியிருக்க
நீரெல்லாம் களம் சென்று
போராடினீர் எமக்காய்
நாமெல்லாம் என்ன
செய்வோம் உமக்காய்
மரணத்தை வென்ற மானிடரே
மரணிக்கா மகிமைகள் செய்து
மக்கள் நம் மனத்தில்
மரிக்காமல் வாழ்பவரே
மா வீரர் உம் குருதியை
ஆகுதியாக்கிக் குளிர் காய்ந்திருக்கோம்
என்றும் எம் விடிவிற்காய்
நாமும் சேர்ந்து தோள் கொடுப்போம்

உமக்கென் றாசைகள் இல்லையா
பாசந்தான் இல்லையா?
மனங்கள் மரணித்துப் போன
கல் நெஞ்சர்களா?
............... இல்லையே............

ஒரு தாயை விடப் பன்மடங்கு
பரிசுத்தமானவர் நீர்
என்றும் எம் கண் கண்ட
காவல் தெய்வங்கள் நீர்....
உம் கல்லறைகள் எம் கோவில்
உங்கள் பாடல் எம் தேவாரம்
துதி பாடி வாழ்த்தினாலும் போதாது
என்ன செய்வோம் நாமுமக்கு?
பெருமிதமாய் நம் கோவிலில்
வணங்குகிறோம் உம்மை என்றும்