தமிழில்

எனது தமிழ் ஆக்கங்களினை இப் பதிவில் நீங்கள் பார்க்கலாம்... எனது ஏனைய பதிவுகளைப் பார்ப்பதற்கு "View My Complete Profile" இனை அழுத்தி வேண்டிய பதிவினைத் தெரிவு செய்க.

Saturday, April 28, 2007

இலங்கைத் துடுப்பாட்ட அணியும் தமிழரும்

மேலுள்ள படம் இலங்கை அரசு உலகிற்குச் சொல்லி வரும் பிரச்சாரமாகும். அதாவது நாட்டில் ஒரு பிரச்சனையும் இல்லை அனைத்து இனத்தவரும் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ்கின்றார்கள்... ஆகவே ஒன்றாக நாம் வாழலாம்... ஒன்றாக விளையாடலாம்.... ஒன்றாக வெல்லலாம் என்ற இலங்கை அரசின் கூற்றாகும். இவ்வாறு கூறுவதன் மூலம் இலங்கையில் நடப்பது ஒரு விடுதலைப் போராட்டம் அன்று... இது ஓர் பயங்கரவாதப் போராட்டமே என்பதனைக் நிரூபிக்க விளைகின்றார்கள்.



மேலுள்ள படம் (உண்மை நிலவரம்): இவ்வாறு இன அழிப்புகள் இலங்கை அரசினால் நடாத்தப்படும் பொழுது... நாம் எப்படி ஒன்றாய் வாழலாம்?... ஒன்றாக விளையாடலாம்... விளையாடி எப்படி வெல்லலாம் என்பது இதில் தமிழ் மக்களால் கூறப்படும் உண்மைகளாகும்.

விளையாட்டுப் புறக்கணிப்பு ஒரு நாட்டை அது பாராமுகமாக இருக்கும் அதனுடைய அரசியல் விடயங்களில் மாற்றங்கள் செய்யச் செய்வதற்கு மிகவும் உதவக்கூடிய ஒன்று. உலகில் பல இடங்களில் இப்படியான புறக்கணிப்பு நியாயமானதாக இருக்கும்... இருந்தும் உள்ளது. உதாரணம்: தென் ஆபிரிக்கா

போட்டிக்கு அப்பால்: விளையாட்டும் அரசியலும்" (More Than a Game: Sports and Politics by Martin Barry Vinokur) என்ற புத்தகத்தில் மாட்டின் பரி வினோகுர் பின்வருமாறு கூறுகிறார்: "நாடுகள் விளையாட்டின் மூலம் தேசியத்தை வளர்த்து எடுக்கின்றன. விளையாட்டு ஒரு நாட்டின் பரப்புரைக்கான முக்கிய கருவியாகப் பயன்படுகின்றது".

நாம் ஆழ்ந்து நோக்குவோமேயானால் இலங்கை அரசின் பரப்புரைக்கும், பிரச்சாரத்திற்காகவும் இந்தத் துடுப்பாட்ட விளையாட்டு பயன்படுத்தப்படுவது புரியும். ஆகவே, தமிழரால் இலங்கை அணி புறக்கணிக்கப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும் என்பதை அனைவரும் உணர்வீர்கள்.

Friday, April 27, 2007

நாட்டுப் பற்றாளர் நாள்

அன்னை பூபதி அவர்களின் நினைவு தினத்தையே நாட்டுப் பற்றாளர் தினமாகவும் பிரகடனப் படுத்தப் பட்டிருக்கின்றது, அதனையே தமிழீழத்து மக்களும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கின்றார்கள். இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக தமிழீழத் தேசத்தினுள் நுழைந்த இந்திய இராணுவம் ஆக்கிரமிப்புப் படையாக மாறித் தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை அழித்தொழிக்கும் வன்முறையில் இறங்கியது.

பொது மக்களின் பங்களிப்புக்களின் சிகரமாக அதியுயர் வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது. ‘இந்தியப் படை உடனடியாகப் போர் நிறுத்தத்தை பிரகடனப்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களின் ஈடுபட வேண்டும்’ என்று வேண்டி திருமதி பூபதி கணபதிப்பிள்ளை அவர்கள் அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

1988ம் ஆண்டு மார்ச் மாதம் பத்தொன்பதாம் திகதி சனிக்கிழமை காலை 10-45 மணிக்கு மட்டக்களப்பு அமிர்தகழி சிறி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் உள்ள குருந்த மர நிழலின் கீழ் அன்னை பூபதி தனது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். முப்பத்தியொரு நீண்ட நாட்கள் அவர்கள் நெஞ்சுரத்துடன் உண்ணா நோன்பிருந்து, விடுதலைத் தாகத்துடன் இறையடி சேர்ந்தார்.

திருமதி பூபதி கணபதிப்பிள்ளை என்கின்ற ஒரு சாதாரணத் தமிழ்ப் பெண்மணியின் விடுதலை வேட்கையும் அதற்கான தியாகமும் நாட்டுப்பற்றின் சிகரமாக அமைந்தன. அன்னை பூபதி அவர்கள் தனது அகிம்சைப் போராட்டத்தை சாகும்வரை மேற்கொண்டது என்பதானது விடுதலை வேட்கையின் உறுதியின் சிகரம் என்றே கூறலாம். ஓர் இனத்தின் அரசியல் விடிவிற்காகவும், ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராகவும் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடாத்தி உயிர்த் தியாகம் செய்த உலகிலேயே முதலாவது பெண்மணி என்ற ஒரு வகையிலும், ஒரு சாதாரண பெண் தனது ஆசைகள் அனைத்தையும் துறந்து தனது நாட்டின் விடிவிற்காக மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் என்ற வகையிலும் அன்னை பூபதி அவர்கள் தமிழர்களிடையே முக்கியத்துவம் பெறுகிறார். அன்னை பூபதியின் அகிம்சை வழியிலான நாட்டுக்கான இத் தியாகம் நாட்டுப்பற்றாளர்களின் தியாகத்திற்கும், அர்ப்பணிப்பிற்கும் ஒரு எடுத்துக் காட்டானதாகும்.

நாட்டுப்பற்றாளர்களை அழிப்பதன் மூலம் விடுதலைப் போராட்டத்தை நசுக்கி விடுகின்ற முயற்சியில் அடக்குமுறை அரசுகள் தொடர்ந்தும் செயல்பட்டு வந்திருப்பதை வரலாறு நமக்குக் காட்டி நிற்கின்றது. முக்கியமாக எமது ஈழத்து விடுதலைப் போராட்டத்தினை எடுத்துப் பார்ப்போமேயானால், சிங்கள அரசானது நாட்டுப் பற்றாளர்களை அழித்து ஒழிப்பதில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

காந்திய வழியினை உலகிற்கு அறிவித்து, அகிம்சையைப் போதித்த இந்தியாவே அரசியல் இலாப நோக்கு என்று வரும் பொழுது அகிம்சைக்கும், சமாதானத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காததற்கு மிகவும் ஒரு எடுத்துக் காட்டு எம் பூபதி அன்னையாரும், தியாகி திலீபன் அவர்களுமே. அன்று இந்திய அரசியல்வாதிகள் பூபதி அன்னையையும், தியாகி திலீபன் அவர்களையும் மட்டும் கொன்று விடவில்லை. மகாத்மா காந்தி அவர்களை இன்னும் ஒரு முறை கொன்றார்கள்... காந்தியத்தைக் கொன்றார்கள்... ஈழ மக்கள் இந்தியா மீது வைத்திருந்த நம்பிக்கை மற்றும் மதிப்பினைக் கொன்றார்கள்.

அகிம்சையை எடுத்துக் கூறிய இந்தியாவே இவ்வாறு நடக்கும் பொழுது, இலங்கை சிங்கள பெளத்தர்களுக்கு மட்டுமே சொந்தம் எனக் கூறி இரத்தக் காட்டேரிகளாக... தமிழரை அழிப்பதிலேயே இதுவரை குறியாக இருந்துவரும் சிங்கள பெளத்தப் பேரினவாதிகள் மட்டும் நம்முடன் சமாதானத்தையும், அகிம்சையையும் பேச வருவார்கள் என்று இன்னும் யாராவது நம்புவார்களேயானால் அது அவர்களது அறிவின்மையே ஆகும். இவையே நமது நாட்டுப் பற்றாளர்கள் தினம் எமக்கு எடுத்தியம்பி நிற்கின்றது.

Wednesday, April 18, 2007

இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு

'சீ' பிளேன் (கோள் மூட்டி) அஃப்ரோ, புக்காரா, சகடை, கெலி (மணிக் கெலி, முதலைக் கெலி, மற்றும் பல), பொம்பர், சுப்பர் சோனிக், கிஃபிர் ஆகிய சொற்களே எம் ஈழத்துக் குழந்தைகள் அம்மா, அப்பா சொல்லும் முன்னரே சொல்லத் தெரிந்து கொள்ளும் வார்த்தைகள். ஈழத்தில் வாழ்ந்த தமிழர்கள் அனைவராலுமே எவ்வகையான பிளேன், அல்லது கெலி வானில் வருகின்றது என்பதனை அதனைப் பார்க்காமலேயே, அதன் சத்தத்தினை வைத்துக் கூறக் கூடியதாக இருந்தது.

சிறுபிள்ளைப் பராயத்தில், ஏதுமறியா வயதினிலே வானில் பறக்கும் விமானத்தைப் பெருமூச்சுடன் அண்ணார்ந்து வேடிக்கை பார்த்த காலம் மாறிப் போய்; தலைதெறிக்கக் கால் கடுக்க உயிரைக் கையிற் பிடித்தபடி ஓடத் தொடங்கிய காலம் வந்தது, ஓடிப் பதுங்கு குழிக்குள் பகல் இரவாய்ப் பதுங்கும் நிலை வந்தது.

இந்திய இராணுவம் ஈழம் வந்த பொழுது, வானெங்கும் ஒரே ஆகாய விமானமும், பரஸூட்டுமாக இருந்தன. நாம் எல்லாம் என்ன செய்வது என்று தெரியாது பயத்தால் நடுங்கியபடி நின்ற பொழுது என் தந்தை என்னையும் என் சகோதரங்களையும் அம்மாவுடன் பதுங்கு குழிக்குள் இருக்கும் படி கூறிவிட்டுச் சென்றார், சில மணி நேரங்கள் கழித்து வந்து அவர் கூறினார், இந்திய இராணுவம் வந்து இறங்கி விட்டதாக... எங்களுக்கெல்லாம் ஒரே மகிழ்ச்சி, இனியும் நாம் பதுங்கு குழிகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணினோம். சில நிகழ்வுகள் நீங்கள் எவ்வளவு சிறியவராய் இருந்திருந்தாலும் அது ஞாபகத்தில் இருந்து அழியாதிருக்கும், அவ்வாறே இந் நிகழ்வானது என் மனதில் இன்னும் அழியாது இருக்கின்றது.

எனக்கு 8 அல்லது 9 வயது இருக்கும் பொழுது; இந்திய இராணுவம் வந்து இறங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் அளவில் ஒரு நாள் எனது அப்பாவின் நண்பர்களும், சொந்தங்களும் உரும்பிராய், சுண்ணாகம், கந்தரோடை ஆகிய இடங்களில் இருந்து எம் வீட்டிற்கு இடம் பெயர்ந்து வந்தார்கள். அனைவரையும் சேர்த்துக் கிட்டத் தட்ட மொத்தம் 7 குடும்பங்கள். தமது பிரதேசங்களில் இந்திய இராணுவத்திற்கும் புலிகளிற்கும் இடையில் சண்டை தொடங்கி விட்டதாகவும், இந்திய இராணுவத்தினரின் 'செல்' மக்கள் குடிமனைகளை நோக்கி விழுவதனால் தம்மால் வீடுகளில் இருக்க முடியாது நாம் வசித்த இடம் வந்ததாகக் கூறினார்கள்.

ஒரு நாள் எனது தந்தை வயல் வேலைகள் ஒழுங்காக நடக்கின்றனவா என்பதனைப் பார்ப்பதற்காகத் தனங்களப்பிற்குச் சென்றார், அவர் வீட்டில் இருந்து புறப்பட்டுக் கிட்டத் தட்ட ஒரு மணித்தியாலங்களின் பின்னர் ஒரு கெலி (முதலைக் கெலி) சாவகச்சேரிப் பிரதேசத்தினை வட்டமிட்டுச் சரமாரியாகத் துப்பாக்கிச் சூட்டினை நடாத்தியது. தனங்களப்பு சாவகச்சேரியிலிருந்து கிட்டத் தட்ட 2 கிலோ மீற்றர் தூரமே என்பதனால் மீசாலையில் இருந்து பார்த்த எங்களுக்கு இந்தக் கெலி எங்கு சுடுகின்றது என்பதனைச் சரியாகக் கூற முடியாது இருந்தது, ஆயினும் எம்மால் கெலி சாவகச்சேரிப் பிரதேசத்தினைச் சுற்றியே சுடுவது நிச்சயமாகக் கூறக்கூடியதாக இருந்தது. அம்மா அழுதபடி என்ன செய்வது என்று திகைத்தபடி நின்றார், கிட்டத் தட்ட அரை மணித்தியாலங்கள் கழித்து அப்பா வீடு வந்து சேர்ந்தார். கெலி சாவகச்சேரிச் சந்தை/ நகர் பிரதேசங்களில் தாக்குதலை நடாத்தியதாகவும் நிறையப் பொதுமக்களின் பிணங்களைத் தான் கடந்து வந்ததாகவும் அவர் கூறினார்.

இந்திய இராணுவம் சாவகச்சேரிப் பிரதேசத்தினை ஆக்கிரமித்த பின்பு, நாம் அனைவரும் இந்திய இராணுவத்தினரின் எறிகணை (செல்) வீச்சுக் காரணமாக 'யெற்றாலை' எனும் ஓர் ஊரிற்கு இடம் பெயர்ந்தோம். இராணுவத்தினரின் எறிகணை வீச்சு யெற்றாலை அளவு தூரத்திற்கு வராததனால் அங்கே நாம் சில காலம் இருந்து கொண்டோம். இக் கால கட்டத்தில் பாடசாலைகள், வேலைத் தளங்கள் எதுவுமே இயங்கவில்லை. தமிழர் செய்த ஒரே வேலை ஏதிலிகளாக இடம் விட்டு இடம் ஓடுவதே. சில வேளைகளில் நாட் கணக்கில் கூட நாம் பதுங்கு குழிக்குள் பதுங்கியபடி இருந்திருக்கின்றோம், சில வேளைகளில் என்ன செய்வது என்பது தெரியாது கொயில்களில் போய்த் தங்கி இருக்கின்றோம்; ஏன் எனில் அங்காவது பாதுகாப்புக் கிடைக்குமா என்ற ஒரு அசட்டு நம்பிக்கையினாலும், போகின்ற உயிர் சாமி சந்நிதியிலேயே போகட்டும் என்ற ஒரு கடவுள் நம்பிக்கையும் ஆகும்.

சிலவேளைகளில் அரிசி, சாப்பாட்டுச் சாமான் மற்றும் உடைகள் எடுப்பதற்காக அப்பா அம்மாவுடனும், சித்தியுடனும் வீடு சென்றுவருவார். இவ்வாறு சென்ற ஒரு தருணம், யெற்றாலை திரும்பும் வழியில் மின்னியபடி செல் வருவதனைப் பார்த்து அம்மாவும், சித்தியும் நிலத்தில் விழுந்து படுப்பதற்காகச் சைக்கிளில் இருந்து குதித்து விட்டார்கள். யெற்றாலை வந்து சேர்ந்த பொழுது, அவர்கள் இரத்தக் கறையுடன் இருந்தார்கள்... என்ன நடந்தது என்று கேட்ட பொழுது அவர்கள் சிரிப்பை அடக்க முடியாது நடந்தவற்றைக் கூறினார்கள்... அதாவது மின்னி மின்னி வந்தது செல் அல்ல ஒரு மின் மினிப் பூச்சியே... அதனைக் கண்டு ஒருவர் குதிக்க அனைவரும் குதித்தது முட் புதரில்... ஆகையினாலேயே இரத்தக் காயம் என்று கூறினார்கள்.

அடிக்கடி இடம் பெயர்வதாலும், எது எப்போது நடக்கும், எப்போது வீட்டினை விட்டு ஓட வேண்டி வரும் என்று தெரியாததாலும் ஒவ்வொரு வீட்டினரும் ஒரு சாக்கு/ பை/ சூட்கேஸ் இல் தமது உடை, உலர் உணவு மற்றும் அவசர தேவைகளுக்கேற்ற சாமான்களை வைத்திருப்பார்கள். வீட்டை விட்டு இடம் பெயர்ந்தால் தவிர நாம் எமது சூட்கேசையோ, பையயோ தொட மாட்டோம். பொதுவாக இதில் இரண்டு சோடி உடுப்பு, உலர் உணவு, சவர்க்காரம், ரோச் லைட், மருந்து வகை, முதலுதவி, தீப் பெட்டி, மெழுகுவர்த்தி ஆகியவை இருக்கும்; அத்தோடு எனது பெற்றோர் ஓர் ரகசியப் பை அல்லது பொக்கெற் அவர்களுடனேயே எப்போதும் இருக்கத் தக்க படி வைத்திருப்பார்கள்... ஏன் எனின் அங்கு வங்கி வசதிகள் இல்லாததால்; பணம், நகை மற்றும் பெறுமதி மிக்கவை அந்தப் பொக்கெற்றில் இருக்கும்.

இந்திய இராணுவத்தினர் தமிழர் இடங்கள் முழுவதையும் தம் வசம் கொண்டு வந்த பின்பு, அவர்கள் அனைத்து இடங்களிலும் செறிந்து இருந்தனர்; ஆகையால் அவர்களது எறிகணை (செல்) வீச்சினை அவர்கள் நிறுத்தினார்கள். தமிழ் மக்களாகிய நாமும் எவ்வளவு காலம் நாடோடியாக ஓடி அலைந்து, யார் என்று தெரியாதவர்கள் தரும் சோற்றையோ கஞ்சியையோ சாப்பிட்டபடி இருப்பது. எமது சீவனோபாயத்திற்காக, நாம் அனைவரும் வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

இராணுவத்தினரின் செல்லடி தான் நின்றதே தவிர, அவர்களது அட்டூளியங்கள் அதிகரித்தபடியே சென்றன. இந்திய இராணுவத்தினர் அடிக்கடி வீடு சோதனை என்ற பெயரில் வந்து இளம் வயதினரைக் கைது செய்து செல்வார்கள். மற்றும் ஒவ்வொரு தடவையும் அவர்கள் வீடு சோதனைக்கு வந்து சென்ற பின்பு எமது ஊரில் யாராவது ஒருவர் வீட்டில் இருந்தாவது ஏதாவது ஒரு பெறுமதி மிக்க பொருள் காணாமற் போகும். அத்துடன் யாரும் பெண்களை வீட்டில் தனியாக விடப் பயப்படுவார்கள். ஏன் எனின், இந்திய இராணுவத்தினரால் பெண்கள் மீது பல கற்பழிப்பு மற்றும் தகாத செயல்கள் நடாத்தப்பட்டிருக்கின்றன.

இது இவ்வாறு இருக்கையில், ஒரு முறை நான் விஜய தசமிக்கு நாடகம் போடுவதற்காக 'இளங்குமணன்' எனும் நாடகம் பழகிக் கொண்டு இருந்த பொழுது, அங்கு வந்த எனது நண்பன் ஒருவன் கூறினான் எனது இரண்டாவது அண்ணா புலிகள் இயகத்தில் இணைந்து விட்டதாகவும், எனது அம்மா பேச்சு மூச்சு இன்றி உடல் நிலை மோசமான நிலையில் படுத்த படுக்கையாக இருப்பதாகவும்; எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, வீடு சென்று பார்த்த பொழுது முதன் முதலாக எனது தந்தை கண் கலங்கி நின்றதைப் பார்த்தேன். அம்மாவோ உடல் நிலை மோசமகியபடியே சென்ற பொழுதும், அண்ணா வீடு வரும் வரை மருந்து ஏதும் எடுக்க மாட்டேன் என்று அடம் பிடித்தவாறு இருந்தார். ஏதோ ஒருவாறு எனது மூத்த அண்ணா இயக்கப் பொறுப்பாளிகளைச் சந்தித்து, எனது அண்ணனை வீட்டிற்குக் கூட்டி வந்தார்.

எனது அண்ணா வீடு வந்த பின்னர் எனது பெற்றோர் அவரை வீட்டில் வைத்திருக்க விரும்பாது எமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் மாறி மாறி வைத்திருந்தனர்; ஏன் எனின் இந்திய இராணுவத்தினரிற்கு எனது அண்ணா புலிகள் இயக்கத்தில் இணைந்து திரும்ப வந்தது தெரிந்தால் அவர்கள் வந்து அண்ணாவைக் கொண்டு சென்றுவிடுவார்கள் என்ற பயமேயாகும். பின்பு சில நாட்களில் 15 வயதே ஆகிய எனது அண்ணாவைத் தனியாக எனது பெற்றோர் இங்கிலாந்திற்கு அனுப்பி வைத்தார்கள்.

'தியாகி திலீபன்' அவர்களை நாம் இழந்த பின்னர், பெரும்பான்மையான இளையோர்கள் புலிகளுடன் தம்மை இணைத்துக் கொண்டார்கள். பெரும் பான்மையான பெண்களும் இந் நிகழ்வின் பின்னரே புலிகளில் இணையத் தொடங்கினார்கள். தியாகி திலீபன் அவர்களுடைய சாகும் வரையான உண்ணா விரதத்தின் பின்னர் ஈழத்துத் தமிழர்கள் அனைவரும் நிச்சயமாக விளங்கிக் கொண்ட ஒரே விடயம்: ஈழத்துள் அமைதி காக்கும் படையாக வந்த பாரதத்திற்குத் தேவையானது தமிழர்களுக்கு சந்தோசமானதோ, அல்லது அமைதியான வாழ்வோ வளங்குவது அல்ல, மாறாக பாரதத் தேசத்தின் அரசியல் இலாப நோக்கமே அங்கு பாரதத்தின் முழுக் கவனத்தின் முன் நின்றது. காந்தியத்தை உலகிற்கு அறிமுகப் படுத்தி உலகத்தையே தம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த பாரதம், அன்று நாம் எடுத்து நடாத்திய காந்தியப் போராட்டத்திற்குப் பாரா முகம் காட்டியது; இதனால் தியாகி திலீபன் அவர்களை நாம் காலனுக்குப் பலி கொடுத்தோம். இவ் விடயம் ஈழத்தவர் இதயத்திற்கும் புத்திக்கும் எடுத்துக் காட்டியது என்ன என்றால் பாரதம் கரி எடுத்து 'மகாத்மா காந்தியின்' முகத்திலேயே அப்பியிருக்கின்றது என்பதே... கேவலம் அரசியல் இலாபத்திற்காக அன்று காந்தியம் என்றால் என்ன என்று கேட்பது போல் இந்திய அரசியல்வாதிகள் நடந்து கொண்டனர். மீண்டும் அன்னை பூபதி அவர்கள் இந்திய அரசியல்வாதிகள் மகாத்மா காந்தி அவர்களை நிச்சயமாகவே மறந்து விட்டனர் என்பதனை அவருடைய சாகும் வரையிலான உண்ணா விரதம் மூலம் நிரூபித்துக் காட்டினார்.

இந்திய இராணுவத்தினரால் எத்தனையோ உயிர்கள் அநியாயமாகச் சூறையாடப்பட்டன. எத்தனையோ கற்பழிப்புகள், களவுகள்... இவ்வாறு சொல்லில் அடங்காக் கொடுமைகள் ஏராளம். ஆயினும் இந்தியா தாம் அமைதி காக்க வந்தவர்கள் என்பதனைத் தப்பட்டம் அடித்து இந்தியச் சகோதரர்கட்கும், வெளி உலகிற்குச் சொல்லித் திரிந்தது. நிலைமைகள் மோசமாகிக் கொண்டே சென்றதனால் எனது பெற்றோர், எனது மூத்த அண்ணாவையும் இங்கிலாந்து அனுப்பி வைத்தார்கள்.

எமது பெற்றோர் ஏற்கனவே எத்தனையோ விடயங்களை எமக்காக இழந்தும், அர்ப்பணித்தும் வாழ்ந்தார்கள்.. எனது அண்ணன்மாரை அனுப்புவதற்காக வயலில் சிறு பகுதி, காணிகள், அம்மாவுடைய நகைகள் போன்றவற்றை விற்றார்கள். இது எனது பெற்றோர்கள் மட்டும் செய்த அர்ப்பணிப்புகள் அல்ல, ஈழத்தில் பொதுவாகவே அனைத்துக் குடும்பத்தினரும் ஒருவரையாவது அகதியாக வெளிநாடு அனுப்பி இருப்பார்கள் ஏன் எனின், தம் பிள்ளையாவது தப்பிப் பிளைக்கட்டும், தப்பியாவது தம் குடும்பத்தினை இந்தக் கொடுமையான அரச பயங்கரவாதங்களில் இருந்து மீட்கட்டும் என்ற ஒரு எண்ணமே காரணமாகும். இதன் காரணத்தினாலேயே இப்போது நீங்கள் எந்த ஒரு நாட்டிற்குச் சென்றாலும் ஈழத் தமிழர்களைக் காண்பீர்கள்... "தமிழன் இல்லாத நாடும் இல்லை... தமிழனுக்கென்று ஓர் நாடும் இல்லை".