தமிழில்

எனது தமிழ் ஆக்கங்களினை இப் பதிவில் நீங்கள் பார்க்கலாம்... எனது ஏனைய பதிவுகளைப் பார்ப்பதற்கு "View My Complete Profile" இனை அழுத்தி வேண்டிய பதிவினைத் தெரிவு செய்க.

Thursday, July 19, 2007

வாதமும்... விதண்டா வாதமும்
இது உயிரைக் குடிக்கும்
ஓர் கொள்ளிவால் பிசாசு….
இங்கு எரிவது சிகரட்டல்ல – உன்
உயிரணுக்கள்
கரிவது இதன் எச்சமல்ல
உன் காலம்
இது தருவது இன்பமல்ல
கான்சர்

00000000000000000000


நீண்ட நாட்களாக Blog இல் நேரம் செலவிடக்கூடிய நிலை எனக்கிருக்கவில்லை... தொடர்ந்து வேலைப் பழு... சோம்பல்... மற்றும் எனைய பிற காரணங்களால் இந்தப் பக்கமே வர முடியாமற் போய்விட்டது...


நாம் ஒரு சமுதாய வட்டத்தில் வாழும் பொழுது, எமக்குப் பல விதமான மனிதர்களுடனும் பழகும் வாய்ப்புக்கள் அமையும்.
அண்மைய காலங்களில் எனது மனதில் உறுத்தியபடி இருக்கும் ஒரு விடயம் இது:
நாம் பிறந்து இப் பூமியில் வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணமாவது நிச்சயமாக இருக்கின்றது என “முழுமையாக” நம்புகின்றேன். ஆகவே, காலத்தை வீணடித்து, வீண் பேச்சுப் பேசித் திரியும் சிலரைக் காணும் போது எனக்கு என்னை அறியாமலேயே அவர்கள் மீது ஒரு பரிதாப உணர்வும், அவர்கள் மீது ஒரு கோபமும் ஏற்படும். ஏன் எனின் இவர்கள் செய்யும் ஒரே வேலை, தமது நேரத்தை உணவு உண்ணவும் வீண் பேச்சுப் பேசவும் வீணடிப்பதே; பின்னர் வெள்ளி, சனிக்கிழமைகளில் நன்றாகச் சமைத்து மதுபானம் அருந்துவதும்… வெட்டிப் பேச்சுப் பேசுவதில் நேரத்தை விரயமாக்குவதுமே இவர்கள் தொழிலாகும். இவர்களைப் பொறுத்தவரையில், வாழ்வில் தாம் மட்டுமே அனைத்தையும் அனுபவிப்பதாகவும் அனைத்தும் தெரிந்தவர்களாகவும் தம்மை நினைத்துக் கொண்டு கிணற்றுத் தவளைகளாக வாழ்கின்றார்கள் என்றே நான் கருதுகின்றேன்.

ஒருவன், மற்றவனைப் பற்றி எப்போது குறை கூறலாம் என்றால், அவன் நிறைவானவனாக இருக்கும் போதே… இதையே ஆங்கிலத்தில் “Practice what you preach” என்று கூறுவார்கள்… அதாவது… நீ சொல்வதை…. நீ முதலில் செயலில் காட்ட வேண்டும் என்பது அதன் பொருள்.

ஒருவன் எதைப்பற்றி விமர்சனம் செய்ய விரும்பினாலும், முதலில் விமர்சனம் செய்பவன் அதற்கேற்ற முறையில் நடந்து காட்ட வேண்டும். நான் இங்கு குறிப்பிடுவது, சிலர் மது அருந்திவிட்டு, அரசியலும், வேறு பல விடயங்கள் பற்றியும் பேசிக்கொண்டிருப்பார்கள், ஆனால் நாட்டில் ஒரு பிரச்சனை, ஒரு உதவி வேண்டும் என்று கேட்டால், எதுவும் செய்யாது ஒதுங்கி விடுவார்கள். வாயிருப்பவன் யாராக இருப்பினும் பேச முடியும்… ஆனால் எதை நாம் பேசுகின்றோம்… அதனைப் பேசுவதற்கு நமக்குத் தகுதி இருக்கின்றதா என்பதை முதலில் அறிந்து பேசவேண்டும் என்பது எனது கருத்து.

சிலர் உரையாடல்களின் போது மறு தரப்பினரைப் பேசவே விட மாட்டார்கள். அண்மையில் எனது நண்பன் ஒருவர் அவர் வீட்டில் இருக்கும் இன்னும் ஒரு நண்பனுடன் வாதாடியபடி இருந்தார். அந்த வீட்டில் இருப்பவர் கூறியது… “இவ்வாறு நிறையக் குடிக்காதீர்கள்… அளவாக மருந்து மாதிரிக் குடிக்கலாம் தானே” என்று. அது எனது மற்றய நண்பனுக்குப் பிடிக்கவில்லை. நீ யார் அதைப்பற்றிச் சொல்ல என அங்கு இருந்தவருடன் மிகவும் பாரதூரமான அளவில் வாக்குவாதம் நடந்தது.

அவர்கள் அருகில் இருந்த என்னால் இதனைக் கேட்டவாறு சும்மா இருக்க முடியவில்லை, ஆகையால் அவர்களிடம் கூறினேன், மதுவை அளவாக அருந்தலாம் தானே… ஒவ்வொரு வாரமும் இவ்வாறு நிறையக் குடிக்கத் தேவையில்லை அல்லவா எனக் கூறினேன்… அதற்கு… அங்கிருந்த நண்பன்… அளவாகக் குடித்தால் ஒரு பிரச்சனையும் இல்லை என்று கூற நீ என்ன வைத்தியனா என்று கேட்டான். நான் கூறினேன், வைத்தியனாக இருக்க வேண்டிய தேவை இல்லை… அதைப் பற்றிய அறிவும் அனுபவமும் இருந்தால் போதும் என்று… அதன் பின்னர்… எனது நண்பர் என்னைப் பேச அனுமதிக்கவில்லை, அவர் மட்டும் பேசியபடி இருந்தார்… நான் கூறிய விடயம் பிழை என்பதுவே அவரது வாதம்… அனால் எனது தரப்பு வாதத்தை நான் அவருக்குப் புரிய வைப்பதற்கு என்னை அவர் பேச விடவில்லை… நான் கூறிய விடயத்தைத் தெளிவு படுத்துவதற்கு நான் முயன்ற போது அவர் குரலின் சத்தம் உயர்ந்தவாறே சென்றது, ஆகவே நான் அவருடன் பேசிப் எவ்வித பயனும் இல்லை என எண்ணி அவ்விடத்திலிருந்து நான் விலகி விட்டேன். மதுவைக் கூட அளவாகப் பாவித்தால் அது மருந்து மாதிரி எமது உடலுக்குச் சில விதங்களில் நல்ல பயங்களைத் தரும் என்பது நான் கற்ற விடயம்… அதாவது மதுவை அருந்துபவர்கள், அதனை அளவாக அருந்தினால் உடலுக்கும் ஆரோக்கியம், சுற்றி அவர்களுடன் இருப்பவர்களின் மனதிற்கும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஒருவன் தான் மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் போது, புதிதாக வேறு ஒரு விடயமும் அவனது மூளையுள் புக அனுமதிப்பதில்லை. தான் பேசும் விடயமே அவனது செவிக்குக் கேட்பதால் அவனால் புதிதாக எவ்விடயத்தையும் கிரகிக்க முடிவதில்லை. நாம் ஒவ்வொருவருமே பல வகையில், பல விடயங்களைப் பற்றிப் பிழையான கருத்துக்களைக் கொண்டிருக்கலாம், அதை நாம் எவ்வாறு அறிந்து கொள்ளலாம் என்றால். எமது மனதையும் செவியையும் திறந்து மற்றவர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுத்துக் கேட்கும் போதே. மற்றவர்களுடைய கருத்துடன் உடன்படுவது என்பது முக்கியமானதல்ல, ஆனால் மற்றவருடைய கருத்தைச் செவி சாய்த்துக் கேட்கும் போது மட்டுமே உங்களால் அந்தக் கருத்துக்கு உடன் பட முடியுமா முடியாதா என்பதனைத் தீர்மானிக்க முடியும். இதையே நீங்கள் ஒருவன் ஒரு விடயத்தைக் கூறும் முன்னரே இவர் இதைத் தான் கூற வருகின்றார் என அனுமானித்தால் அது மிகவும் தவறான செயலாகும். இதனை Assume என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இதனையே மனோதத்துவ நிபுணர்கள் Assume என்பதை Ass-U-Me என்று கூறுவார்கள். அதாவது Ass = கழுதை, U = நீ, Me = நான்/என்னை. அதாவது ஒரு விடயத்தை அனுமானிக்கும் (Assume) செயல் உன்னையும் என்னையும் கழுதையாக்கி விடும் என்பது இதன் பொருள்.