தமிழில்

எனது தமிழ் ஆக்கங்களினை இப் பதிவில் நீங்கள் பார்க்கலாம்... எனது ஏனைய பதிவுகளைப் பார்ப்பதற்கு "View My Complete Profile" இனை அழுத்தி வேண்டிய பதிவினைத் தெரிவு செய்க.

Tuesday, May 22, 2007

தண்ணீர்... தண்ணீர்... தா...தண்ண்ணீஈஈ...ர்

எனக்கு நல்ல விடயம் எனப் பட்ட ஒரு விடயத்தினை இங்கு எழுதுகின்றேன்... உங்களுக்குச் சரி எனப் பட்டால் அதனை நீங்கள் கடைப் பிடிக்கலாம். யாராவது இங்கு இவன் "தண்ணி அடிக்கிறதைப்" பற்றி எழுதி இருக்கிறானா என நினைத்து வந்திருந்தால் அவர்களுக்கு அவர்கள் ஏமாந்ததைத் தெரிவித்துக் கொள்கிறேன் ;)

இக் கட்டுரையினை நான் இங்கு எழுதக் காரணம், தரவுகள் தருவதன் மூலம் உங்களைப் பயப்படுத்துவதல்ல; மாறாக, நம்மைச் சுற்றி என்ன நடக்கின்றன, நாம் அறிந்தும், அறியாமலும், கவன ஈனத்தினத்தின் காரணத்தாலும் நம்மைச் சுற்றி என்னென்ன நம்மால் நடாத்தப்படுகின்றன என்பதனை எடுத்துக் கூறுவதே எனது நோக்கமாகும்.

இன்று உலக வெப்பம் அதிகரித்துக் கொண்டு செல்வதன் காரணமாகவும், மக்களின் தொகை அதிகரித்த வண்ணம் செல்வதன் காரணமாகவும், அருமையான தண்ணீரை நாம் உபயோகிக்க வேண்டி உள்ள அளவு குறைந்தபடியே செல்கின்றது.

உலகில் இருக்கும் நீரின் அளவோ முடிவானது. அதே நேரம் நமது வளர்ந்து வரும் மக்களின் தொகையோ அதிகரித்தபடியே செல்கின்றது; ஆகவே நமது நீரின் பாவனையும் அதன் தேவைகளும் கூட அதிகரித்தவாறே செல்கின்றன.

இப்பொழுது உலகில் ஒன்றில் மூன்று பகுதியினர், நீர் மிகவும் குறைவாக உள்ள பிரதேசங்களிலேயே வாழ்கின்றார்கள். இதுவே 2025ம் ஆண்டளவில் இரண்டில் மூன்றாக அதிகரிக்க உள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள். 1

ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது, ஒரு நாளிற்கு ஒருவரிற்குரிய குறைந்தளவு நீர் கொள்முதல் அளவானது 50லீட்டர் என. இதுவே குடி நீர், குளியல்/சுத்தம் செய்தல், மற்றும் சமையல் மற்றும் இதர தேவைகளுக்காகப் பயன்படுத்தப் போதுமானதாகும் என ஐ.நா தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த 50 லீட்டர் நீரிலும் குறைவான நீர் கொள்முதலுடன் வாழும் நாட்டு மக்களும் உள்ளதாக அதே ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறாக குறிப்பிட்ட அளவு நீர் கொள்முதல் வசதியே சில இடங்களில் இருக்கின்றன, ஆயினும் அதனைக் கூடச் சில இடங்களில் குப்பைகளைக் கொட்டியோ, அல்லது கழிவுகளைக் கலக்க விடுவதன் மூலமோ அந்த நீரையும் நாம் நாசம் செய்து விடுகின்றோம். இதனால் நீரின் மூலம் பரவும் கொலரா, மலேரியா, வாந்திபேதி போன்ற நோய்களை நம்மை அறியாமலேயே அந்த நீரை உபயோகிப்பவர்களுக்கு நாம் ஏற்படுத்துகின்றோம்.

இது இவ்வாறிருக்க, நம் அனைவராலும் நீர் விரயம் செய்யப்படுகின்றது. அதாவது உதாரணத்திற்கு எனது வீட்டினரையே எடுத்துக் கொண்டால்: எனது வீட்டார் சில வேளைகளில், சமையலறையினைச் சுத்தம் செய்யும் பொழுது பைப்பில் (pipe or water tap) நீரினைத் திறந்த படி விட்டு, சுற்றி வர உள்ள இடங்களைச் சுத்தம் செய்வார்கள், அதனை நான் எடுத்துக் கூறும்பொழுது, தண்ணி திறக்காமல் தண்ணி வராது அல்லது நான் எவ்வாறு தண்ணி பாவிக்காது சுத்தம் செய்வது என விதண்டாவாதம் பேசுவார்கள், அதாவது நான் கூறுவது தண்ணீர் திறக்க வேண்டாம் என அல்ல, ஒரு இடத்தினைத் துப்பரவு செய்வின் ஒரு துணியை ஈரமாக்குவதற்குத் தேவையான அளவு நீரைப் பயன்படுத்தி விட்டு நீர் வரும் குழாயினை பூட்டி/மூடி விடலாம் அல்லவா... நாம் நீர் ஓடியபடி விட்டுப் பின் மற்றைய இடங்களைச் சுத்தம் செய்யும் பொழுது அங்கு குழாயிலிருந்து லீட்டர்க் கணக்கில் நீர் தேவையற்று விரயமாகிவிடும்.

அதே போன்று, குளிக்கும் பொழுது பொதுவாக நாம் ஊரில் கிணற்றில் வாளி போட்டு அள்ளிக் குளித்துப் பழகி, எப்படிக் குளித்தாலும் எமக்கு நிறைவு இருக்காது. அதனால் பலரும் மணித்தியாலக் கணக்கில் குளிப்பதனை நான் கண்டிருக்கின்றேன், ஏன் நான் கூட நீர் பற்றி ஒரு விளிப்புணர்வு வரும் வரை அவ்வாறு செய்திருக்கின்றேன். ஒரு 5 நிமிடத்தில் உங்களது குளியலைத் தாராளமாக முடிக்கலாம் என்பது எனது எண்ணம் மட்டும் அல்ல ஆராய்ச்சியாளர்களும் இதனையே செய்யுமாறு அறிவுறுத்துகின்றனர். அதே போன்று, குளிக்கும் பொழுது சவற்காரத்தினை நாம் பாவிக்கையில் நீர் வழிந்து தேவையற்று விரயமாவதைத் தடுப்பதற்காக அதனை நிறுத்தி விட்டு நாம் சவற்கரத்தில் உடலில் போடலாம் தானே?

மற்றும், சிலர் பல் துலக்கும் பொழுதும், முகச் சவரம் (shaving) செய்யும் பொழுதும், சமையற் பாத்திரங்கள் கழுவும்பொழுதும் நீர் வரும் குழாயினைத் திறந்தவாறு விட்டே தமது வேலைகளைச் செய்கின்றார்கள். தமக்குத் தேவையான அளவு மட்டும் எடுத்துக் கொள்ளாது நீரை வீணாக்குகின்றார்கள்; அத்துடன் கார் கழுவுதல், வீட்டுப் பூஞ் செடிகளிற்கு நீர் இறைத்தல் போன்ற மேற் குறிப்பிட்ட விடயங்களினால் நீர் விரயமாகும் விகிதம் அதிகம் என நான் வாழும் நாட்டு அரசினர் அடிக்கடி கூறித் தொலைக்காட்சியிலும் அது பற்றி விளிப்புணர்வு வருவதற்காக விளம்பரங்கள் செய்கின்றார்கள்.

நாம் நீரினைத் தேக்கி வைத்துப் பாதுகாத்து அதனை உபயோகிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். உதாரணமாக: நீர் தேக்கும் தொட்டிகளினை வீட்டில் அமைத்துக் கொள்ளலாம், அதனை இங்கு நான் வாழும் நாட்டு அரசு மிகவும் ஆதரித்து அதற்கு நிதி உதவி கூட வழங்குகின்றது. ஆகவே பண்டைய காலங்களில் மன்னர்கள் குளங்கள், மதகுகள் எனக் கட்டி நீரைத் தேக்கியது போல, நாமும் இக் காலத்திற்கும் பிரதேசங்களிற்கும் ஏற்ற முறையில் ஏதாவது செய்யலாம், செய்து நீரைத் தேக்கி அதனை நமது இதர செயல்களுக்குப் பாவிக்கலாம் என்பது எனது கருத்து.

இது கூட நாம் செய்யாவிடின், எமக்குப் பின் வரும் சந்ததியினர் ஒரு துளி நன்னீர் எடுக்கக் கூட மிகவும் அலைந்து திரிய வேண்டிய நிலை உருவாகும்; அவர்களுக்கு நம்மால் ஒரு பாலைவனத்தினை மட்டும் தான் பரிசாகக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். அவர்களிற்கு இந் நிலையினை ஏற்படுத்த நாமே காரண கர்த்தாக்களாகவும் அமைந்து விடுவோம். நானிங்கு நடப்பவற்றினைக் கூறியுள்ளேன்... முடிவு எடுக்க வேண்டியவர்கள் நல்லது கெட்டது தெரிந்த தனி மனிதர் ஒவ்வொருவருமே.

Friday, May 18, 2007

பூ...

வி.ஜெயச்சந்திரனிடம் இருந்து சினேகிதி சுட்டதை, நான் சினேகிதியிடம் இருந்து சுட்டது... மற்றும் வி.ஜெ இடமிருந்து நான் நேரடியாகச் சுட்ட ஒரு பூவும். இவை சுட்ட பழம் அல்ல... சுட்ட பூ ;)
நெஞ்சில் இதம் தந்து
வஞ்சி குழல் கொண்டு
எஞ்சி நின்றாலும்
நிறம் மாறும் பூவே
நிறைவான் உன் வாழ்வு
மாற்றாருக் கின்பங் கொடுப்பதிலா?
வாசங் கொடுத்தாய் - அன்பர்க்கு
நேசங் கொடுத்தாய்...
ஆனால்...
நீ மட்டும் உதிர்ந்து
நம் நிலை யற்ற
வாழ்வை நினைவுறுத்தி
எவருக்குமே இன்பங்
கொடு வென்று
குறிப்பாற் கூறி
பசளை யாகிறாய்
நாம் (பூ) கவிழ்ந்திருக்கக் காரணம்:

நல் வாசம் தந்து -மனிதன்
மனதி லின்பமுந் தருகையில்
துட்டனைப் போல் வந்து
கெட்டதேதும் செய்யா எம்மை
மட்டமான நினைப்புடனே
தொட்டு எம்மைப் பறிப்பதனால்
மனிதா நீயல்லவா
தலை குனிய வேண்டு மென்றே
நல்லவற்றை மறந்த
அவனுக்கு நினைவூட்டுகிறோம்
நம் தலை மட்டுங் குனிந்து


Thursday, May 17, 2007

மதம் சார்ந்தவர் மதம் பிடித்தவரா???

வலைப் பதிவாளர் ஒருவருடைய வாதத்திற்கு பதிலாக நான் இந்தப் பதிவினை இடுகின்றேன்

//உலகில் தவறு செய்யாது உலகில் சுமார் 95% கடவுள்நம்பிக்கை கொண்டவர்கள் இருக்கிறார்கள் (http://www.positiveatheism.org/writ/martin.htm). ஆகவே தவறு செய்பவர்களில் அதிகமானோர் கடவுள்னம்பிக்கையுள்ளவராக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். இதுவே என் வாதம்.கடவுள்னம்பிக்கை ஒருவனை செம்மைபடுத்துகிறதா?என்ற வாதத்திற்கு எதிர்வாதம் தான் இது.//

இதே வாதத்தின் படி பார்த்தால் உலகில் நல்லவை செய்பவர்களுள் அதிகமானோரும் கடவுள் நம்பிக்கை உடையவர்களாகவே இருப்பார்கள். (மீண்டும் அவர் வாதத்தினை வாசிக்கவும்).

கடவுள் நம்பிக்கை ஒருவரை நல்ல வழியில் செலுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, அது அவரை வெறியனாகவோ, ஜதார்த்த வாழ்வைப் பார்க முடியாதவனாகவோ செய்து விடக்கூடது என்பதே எனது எண்ணம்.

அண்மையில் ஒரு புத்தகம் வாசித்தேன், அது ஜேசு பற்றியது, அதில் ஜேசு மேரி மக்டிலனை திருமணம் செய்தார் அவரிற்கு குழந்தைகள் கூட உண்டு என நிரூபிக்கின்றது. ஜேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த் தெழுந்தார் என்பது பொய், அவர் அக் கால கட்டத்தில் இறக்கவில்லை... பைபிளில் கூறப்படுவதற்கும் பிற்பட்ட காலப் பகுதியில் பல ஆண்டுகளின் பின்பே அவர் இறந்தார் எனவும் மற்றும் பல விடயங்களும் அத்தாட்சிகளுடன் நிரூபணமாக எழுதி இருந்தார்கள்.

இதனை இந்துவாகிய நான் எனது கிறிஸ்தவ நண்பர் ஒருவருடன் பேசிய பொழுது, நண்பன் "அவர் உயிர்த்து எழுந்திருந்தால் என்ன, எழாமல் இருந்தால் என்ன... நான் ஜேசுவைச் சந்தித்த பின்பா அவர் வழிகாட்டலில் நடக்க ஆரம்பித்தேன்??, அவர் கூறிய நல்ல விடயங்கள் எனக்குப் பிடித்திருந்ததாலும் எனக்கு அது மனதிற்கு சந்தோசமும், மன அமைதி தருவதாலுமே அவரை நான் வழிபடுகிறேன். மொத்தத்தில் பைபிள் நமக்கு நல்லவற்றையே போதிக்கின்றது, அவ்வாறே மற்றைய சமய நூல்களும் நல்லவற்றையே போதித்து, நல்லவற்றையே செய்யுமாறு கூறுகின்றன... ஆகவே ஜேசு இருந்தாரா, அல்லது உண்மையா பொய்யா என்பது எனக்கு முக்கியமல்ல அவர் பெயரில் உருவாகிய கோட்பாடுகளும், தத்துவங்களுமே எனக்கு முக்கியம்" என்று கூறினான்.

எனது நண்பர் கூறியதில் எவ்வளவு ஜதார்த்தம் இருந்தது என்பதனை எண்ணிப் பார்த்தேன், நண்பர் கூறியதில் எந்தத் தவறும் இல்லை எனத் தோன்றியது; அதாவது நாம் கடவுள் இருக்கிறாரா இல்லையா என வாதிடத் தேவையில்லை, வாதிட்டுப் பயனும் இல்லை. ஏன் எனின் நான் அறிந்த வரையில் கடவுளை முன் கொணர்ந்து கடவுள் உள்ளார் என நிரூபிக்க முடியாது, ஆனால் கடவுளின் பெயரால் நல்லவற்றை நாம் கற்றுக் கொள்ளும் பொழுது அதனை ஆதரிப்பதில் தவறேதும் இல்லையே என எனக்குத் தோன்றியது.

எனக்குத் தெரிந்த சிலரில் ஒருவரைப் பற்றிக் கூறுகிறேன்: இவரும் இவர் குடும்பத்தினரும் கோவிலிற்கு அடிக்கடி செல்வார்கள், நல்ல பணக்காரர்கள், ஆனால் ஒரு சதமும் ஏழைகளுக்குக் கொடுக்க மாட்டார்கள். கோயில் கட்டுமானத்திலிருந்து, ஒவ்வொரு மாதமும் பல கோயில்களுக்குக் காசினை அள்ளி அள்ளிக் கொடுப்பார்கள், ஆனால் அனாதைச் சிறுவர்களுக்கு காசு சேர்க்கிறோம் காசு தருவீர்களா என்றால் வீட்டை விட்டுத் துரத்துவார்கள்.

சரி, அது தான் அவர்கள் சொந்த விருப்பம் என எண்ணி நாம் விட்டால், எனது நண்பன் ஒருவன் இலங்கையில் இருந்து இங்கு வந்திருந்தான் (நான் குறிப்பிடுபவர்கள் எனது நண்பனுக்கு மாமா முறை) இங்கு வந்த பொழுது அவனிடம் குளிருக்குப் போட ஒரு உடை கூட இருக்கவில்லை, அவர்களோ தமது (அவர்களிடம் கிட்டத்தட்ட 10 வீடுகள் உள்ளன) வீட்டு வேலைகள் (புல் வெட்டுதல், பூந் தோட்டம் அமைத்தல், வீட்டு சுவர் சுத்தம் செய்தல், paint அடித்தல்) அனைத்திற்கும் எனது நண்பனையே கூட்டிச் செல்வார்கள், ஆனால் அவனுக்கு குளிருக்குப் போர்க்க போர்வையோ அல்லது குளிருக்கு உடையோ கூட வாங்கிக் கொடுக்கவில்லை. அவன் இங்கு வந்த பொழுது நடுத் தெருவில் நிற்க வேண்டிய நிலையில் இருந்தான். அவர்கள் ஒரு உதவி கூடச் செய்யவில்லை.

இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இறைவனைக் கும்பிட்டு என்ன கும்பிடாது விட்டென்ன. இவர்கள் எல்லாம் பக்கத்து வீட்டில் மரண ஓலம் எழ அந்த ஒலியிலேயே தம் வீட்டில் "Party" வைப்பவர்கள்.

அதே போன்று சிலர் கண் மூடித்தனமாக இருந்து, தாம் செய்யும் கொலைகள் கொள்ளைகளுக்கும் கடவுளின் நாமத்தின் பெயரில் தாம் அதனைச் செய்வதாகக் கூறுகிறார்கள், ஆனால் எந்த ஒரு மதத்தினை நாம் எடுத்துக் கொண்டாலும் கடவுளின் வாசகங்களிலே, அனைவரிடமும் அன்பு காட்டும் படியே கூறப்பட்டுள்ளது.

ஆகவே மதங்கள் அன்பையும், பண்பையும், தர்மத்தினையும், அகிம்சையையுமே போதிக்கின்றன... ஆனாற் சில மனிதர் மதங் கொண்ட யானை ஆகி, அவர்களுடைய மதத்தின் பெயரினால் மதங் கொண்ட யானையிலும் விடக் கேவலமாக்கி விடுகின்றான்.
எமக்கு எம்மதமும் சம்மதமே, கடவுளின் பெயர்ப் பிரிவுகளால் அல்ல; அன்பு, பண்பு, அகிம்சை, தருமம் என்னும் பொதுக் கோடபாட்டின் அடிப்படையில்.

Wednesday, May 16, 2007

இந்திய இசையும்... இனிய இயல்பும்...

இராகங்கள் பதினாறு உருவான வரலாறு... நான் பாடும் போது அறிவாயம்மா.
பல நூறு இராகங்கள் இருந்தாலென்ன...
பதினாறு பாடச் சுகமானது....

ஆமாம்... அந்தப் பதினாறென்ன... அப் பல நூறு இராகத்திலமைந்த பாடல்களுமே மனதிற்கு ஒவ்வொரு வகையில் இன்பம் தருவனவாகவே அமைந்துள்ளன. இந்தியர்களின் கண்டு பிடிப்புக்களில்; இசைக்கு அவர்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து, அவற்றை ஆராய்ந்து, பாகுபடுத்தி; இராகம், தாளம், சுருதி, சந்தம்... என எவ்வளவோ விதமாகப் பட்டியலிட்டு... ஒழுங்கு படுத்தி இவற்றை அமைத்துள்ளனர்.

காலையில் பாடவேண்டிய இராகம், அதாவது காலையில் எழும் பொழுது இவ்விராகத்தைக் கேட்டு எழுந்தால் அன்றைய பொழுது எமக்கு சுறு சுறுப்பாகவும், மனச் சந்தோசம் நிறைந்ததாகவும், ஒரு முழுமை மிக்க நாளாகவும் அமையும் என்பது மனோவியல் நிபுணர்களின் கருத்து. மாலையில் பாட வேண்டிய இராகம், இது ஒருவர் ஒரு நாட் பொழுதில் கடினமாக உழைத்து வீடு திரும்பும் பொழுது இந்த இராகத்தில் பாடலைக் கேட்டாலோ பாடினாலோ அவருக்கு மீண்டும் புத்துணர்சி ஏற்பட்டு, உடல் நிலை இலகுவாகும் என்று மனோவியல் நிபுணர்கள் கருதுகின்றார்கள். இவ்வாறு ஒவ்வொரு சிறு நிகழ்வுகளுக்கும் உரிய இராகங்கள், பாடல்கள் என அடுக்கிக் கொண்டே செல்லலாம். இவ்வாறு அக் காலத்திலேயே அவர்கள் நடாத்திய ஆய்வுகளும் அதனால் உருவாகிய அவர்களது கண்டு பிடிப்புக்களும் அபாரமானவை.


இக் காலத்தில் விஞ்ஞான வளர்ச்சியின் பின்பு இந்தியக் கண்டுபிடிப்புகள் பல விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் பட்டும் உள்ளன. இவை இராகத்திலோ பாடலிலோ மட்டும் அல்லாது, நமது யோகாசனம், தியானம், சித்த மருத்துவம், சமையல் அதாவது சமையலும் எமது சமையலில் சேர்க்கப்படும் ஒவ்வொரு வகையான வாசனைத்திரவியங்களோ அல்லது, எதுவாக இருப்பினும் அவை யாவும் மருத்துவ குணம் நிறைந்தவை என்பதும் இக் காலத்திலே மேலைத்தேயர்களால் விஞ்ஞான முறையில் நிரூபிக்கப் பட்டுள்ளன.
இவை இப்படி இருக்க நமது பெருமையே நமக்குத் தெரியாது, நம்மை நாமே தாழ்வாகப் பேசி வாழ்பவர்கள் பலர். சிலர் தாம் இந்திய வம்சத்தினர் என்பதனை வெளியில் கூறிக் கொள்ளவே வெட்கப்பட்டு வாழ்பவர்களாக இருக்கின்றார்கள்; இப்படியானவர்கள் சிலரைச் சில மேலைத்தேய நாடுகளில் நான் கண்டிருக்கின்றேன். இவர்கள் எல்லாம் தாம் நடந்து வந்த பாதையினை அறியாதவர்கள், போகும் இடமும் தெரியாதவர்கள் என்றே நான் எண்ணுகின்றேன். தன் சுய இலாபத்திற்காகத் தன் இனத்தினையே தாழ்த்திக் கூறுபவனையும், காட்டிக் கொடுப்பவனையும் விட வேறெவரும் தாழ்ந்தவனாக இருக்க மாட்டான் என்பது என் கருத்து.


அண்மையில் அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள தென் மெக்லீன் செல்வ விநாயகர் கோவிலில் அமைதியும், மழையும் வேண்டிப் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் வனஜா சுந்தரராஜன் என்பவர் எழுதிய பாடல்கள் பாடப்பட்டன; வனஜா சுந்தரராஜனும், இந்திரா ஸ்ரீநிவாசனும் அமிர்த வர்ஷினி இராகத்தில் ஒரு பாடலைப் பாடினார்கள். நீரின் அதிபதியான வருண பகவானுக்குகந்த இராகத்தில் பாடல்கள் பாடப்பட்டதனைத் தொடர்ந்து பல மாதங்களாகப் பெய்யாத மழை அன்று மாலை குயீன்ஸ்லாந்தில் மழை பெய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


என்னைப் பொறுத்தவரையில், இந் நிகழ்வானது தற்செயலாகவே நடந்திருந்தாற் கூட, அக்காலத்தில் நம்மவர்கள் வருணனுக்கு என்றும் ஒரு இராகம் அமைத்திருப்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது இந்திய மூதாதையர்களை நினைத்துப் பார்க்கையில் மிகவும் பெருமையாக உள்ளது.

Tuesday, May 15, 2007

தமிழ் மாணவர்கள் வேண்டுகோள்!!

இந்த பிரசுரம் தெளிவாக பார்க்க டபிள் கிளிக் பண்ணவும்

Double Click on the Image to see it Properly... In tamil


தமிழ் மாணவ்ர்களுக்கு கொலை மிரட்டல் - ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்க்க வேண்டியது

இந்த பிரசுரம் தெளிவாக பார்க்க டபிள் கிளிக் பண்ணவும்Monday, May 14, 2007

ஏன் நம் நாட்டுக் கலைகள் மேற்கிற் பரவவில்லை?

இங்கிலாந்து இந்தியாவினை அடியாண்டு கொண்டு இருந்த பொழுது அவர்கள் ஏன் தாஜ் மகாலைப் பற்றி மட்டும் மேற்கத்தைய உலகிற்கு எடுத்துச் சென்றார்கள்? ஏன் நம் ஊரில்... நம் நாட்டில் இருக்கும் கோயில்களும் அதன் சிற்ப வேலைப்பாடுகள் பற்றியும் வெளி உலகிற்குத் தெரியப் படுத்தவில்லை என்ற கேள்வி பல காலமாகவே என்னுள் எழுந்தவாறே இருந்தது... ஆயினும்... இங்கு இறுதியிலே நான் இணைத்துள்ள ஒலி ஒளிப் பேளை அதனைப் பற்றி தெளிவாக விளக்குகின்றது.

அதாவது நம்மூர்க் கோயில்கள், எவ்வளவோ பிரமாண்ட மாகவும் சிற்ப வேலைப் பாட்டுடனும் கட்டப்பட்ட பொழுதும்; மேற் கத்தேயக் கட்டிடக் கலையுடன் அன்றிருந்த எமது கட்டிடக் கலை அறிவுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் எமக்குக் கிட்டக் கூட நெருங்க முடியாத நிலையில் மேற்கத்தேயம் இருந்த பொழுதும், எதற்காக யாரும் எம்மைக் கண்டு கொள்ளவே இல்லை??

இவ் ஒளிப் பேளையில் கூறுகின்றார்கள், எமது கோவிற் கோபுரங்களில் ஆபாசமான சிலைகள் இருந்தமையே அதற்குக் காரணமாம். அதாவது கிறிஸ்தவ மதத்தினைச் சேர்ந்த (பொதுவாக) இங்கிலாந்தவர்கள் இவ்வாறான ஆபாசம் நிறைந்த கலை வேலைப்பாடுகளை அன்று அடியோடு வெறுத்தும், ஒதுக்கியும் வந்தனராம். (ஆனால் இன்று அவர்கள் கலாச்சாரச் சீர்கேடு விளைவித்து... அம்மணமாக அங்கும் இங்கும் அலைவது வேறு கதை)

சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய வேறு கோயிற் கட்டிடங்கள்:அக் காலத்தில் இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவில் பற்றிய ஒரு ஒலி ஒளிப் பேளை இது

Sunday, May 13, 2007

கானா - பிரபா பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

பிரபா அண்ணாவிற்கு... எ(ம)னது பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

இறைவனவன் கிருபையுடன்
இனிதான வாழ்க்கையுடன்
இனிய நல் மனத்துடன்
இல்லத்தில் நிறைவுடன்
இதயத்தில் சிறப்புடன்
எண்ணத்தில் நிறைவாகவே
சிறியதையும் பெருமையுடன் - ஏற்று
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்...

அம்மா

You give me food
Even though you starve
You take my illness
When I don’t feel so good
You will be crying
When I am in pain
Selfless love…
Where can you see that and how?


You always treat me
With love and careand always have
Enough to shareI know some day
You will have to leavebut you'll be there
I'll just believe
Even though
I’m here without you
You remind me
Even when I tie my shoe
I'm so lucky to have
A mom like you these are the loving things
You always do

I see you working hard for me
And wonder what it means
I do that same for you??
And give up my dreams…
When I say something bad to you
It breaks my heart too…

How can I repay you?
I know you told me
God gives you everything…
But…
You gave me everything…
You are my God
Everyone’s telling me
God is in heaven
But…
You are my God
That I witness on earth

Friday, May 11, 2007

அம்மா நீ எங்கே???


அம்மாவிற்குப் பூசை இன்று
அவள் மகன் கணபதிக்குப் பூசை நாளை
எல்லாந் தமிழர் விடிவு நாடி
விழுந்து வணங்கும் பக்த கோடி

அன்று வன்னிக்கு
இடம் பெயர்ந்தேன்
ஏதிலியாய்...
அம்மா உனை
அழைத்தேன் உன்னன்புப்
பேதலியாய்...
ஆயினும்...
அம்மாவுன் அரவணைப்பு - அன்றுங்
கிடைக்கவில்லை யெ(ம)னக்கு
எனினும்...
மனமே சோராது - என்றும்
மனத் தொலைபேசியில் தொடர்புற்றேன்
அதில் 'கலோ' சொன்னவன்
அம்மா உன் வீடும்
எறிகணையிற் சிக்கியது என்றான்...
இதில் பயந்து ஓடியவள் நீ
திரும்பி எட்டியும்
பார்க்கவில்லை என்றான்...
நீயே இராணுவத்திற்கும்
எறிகணைக்கும் பயந்
தோடித் திரிகையிலே...
எம்மை அரவணைக்க
எங்கே நேரம்
வரும் உனக்கு...
செய்தித் தாளில்
தேடப்படுவோர் விபரத்திலுங்
கொடுத்துப் பார்த்தேன்...
நீ எங்கு உள்ளாய்
என யாருக்குந்
தெரியவில்லை யம்மா...

சிரிப்பு வர - உன்னில்
கோபம் வர
அன்பு வர - என்னுள்
அழுகையும் வருகின்றது
ஏனென்று தெரியவில்லை
எவையெதற் கென்றும் புரியவில்லை
ஆழிப் பேரலை கொண்டு - அன்று
குமரியை அழித்தாய் நீ
வாழ்ந்த பேரினத்தை - இன்றுஞ்
சீற்றத்தாற் குலைக்கின்றாய்
இன்றும் வாழ விடாது
எமையே வதைத்து
அடிமை வாழ்வுடன்
ஆறாத் துயருடனே
எம்மை எதற்காய்
அலைவிக்கிறாய் தாயே

எங்கும் ஏதிலியாய் ஓடினும் - நாம்
என்றும் உன் நாமமே பாடி
தமிழர் நம் விடிவினை நாடி - நாம்
விழுந்து வணங்கும் பக்த கோடி
உனக்கின்று பூசை - நாளை
உன் மகனுக்கும் பூசை
தாயே நீ...
விடிவினைத் தருவாயா
இல்லை எம்மை இனியும்
விரட்டித் தான் அடிப்பாயா?

தாயிடங் கூட...
உனக்கொன்று செய்கிறேன்
எனக்கு ஒன்று செய்வாயா
என்றல்லவா கேட்கவேண்டி இருக்கிறது....
பதில் கொடு தாயே
நீ இன்னும் இருந்தால்...

Thursday, May 03, 2007

பைபிளில்....

"இதுவே ஆண்டவர் நமக்குக் கூறுகிறார்: 'இதோ, நான் ஈழத்தின் நாணை அறுத்து விடுகிறேன். நான் நான்கு பக்கங்களாலும், நான்கு வகையான காற்றினைத் தேவலோகத்தின் கால்வாசிப் பகுதியினின்று கொணர்ந்து... ஈழத்திற்கு எதிராக அனுப்பி, அங்கு இருப்பவர்களை அல்லோலப் படுத்துவேன்; இங்கு உலகில் ஈழத்தவன் சென்று தஞ்சமடையா நாடே இருக்காது. நான் அவர்கட்கு அழிவினைக் கொடுத்து அவர்களின் அனைத்தினையும் எடுத்துக் கொள்வேன்' என்று ஜேசு பிரான் கூறுகிறார். 'நான் அங்கு எனது ஆட்சியினை ஏற்படுத்தி, ஈழத்து மன்னனை அவனது ஆட் பரிவாரங்களுடன் அழித்தொழிப்பேன். ஆனாலும் நான் மீண்டும் ஈழத்தினர்க்குச் சுகத்தினை வளங்கி நல்லவற்றை வளங்கும் நாளினையும் ஏற்படுத்திக் கொடுப்பேன்" என்று ஆண்டவர் கூறுகிறார்." ஜெரெமயா 49:35-39

இன்கு ஈழம் என எழுதி இருப்பதனை, ஆங்கில பைபிளில் 'Elam' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இது நமது ஈழமா அல்லது முற் காலத்தில் ஈழம் (Elam) என்று அழைக்கப்பட்ட இன்னும் ஒரு நாடா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் எதனை இறைவன் பைபிளில் கூறி உள்ளாரோ அது அப்படியே ஈழத்தில் நடக்கின்றது. என்றாவது ஒரு நாள் நமக்கெல்லாம் விடிவு வந்து, நாம் எல்லம் எமது தாய் நாடு சென்று நின்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்வோமென்று எண்ணுகின்றேன்.

ஆங்கில பைபிளில் எப்படி உள்ளது என்று பார்க்க:
“This is what the Lord Almighty says: ‘See, I will break the bow of Elam, the mainstay of their might. I will bring against Elam the four winds from the four quarters of the heavens; I will scatter them to the four winds, and there will not be a nation where Elam’s exiles do not go. I will shatter Elam before their foes, before those who seek their lives; I will bring disaster upon them, even my fierce anger,” declares the Lord. “I will pursue them with the sword until I have made an end of them. I will set my throne in Elam and destroy her king and officials,” declares the Lord. “Yet I will restore the fortunes of Elam in days to come,” declares the Lord.” Jeremiah 49:35-39

Wednesday, May 02, 2007

அன்பே சிவம்...

சிலர் செருப்பணிந்தவாறே, அது சரியில்லை என்று வேறொன்றிற்கு ஆசைப்படுவார்கள்; சாண்டில்ஸ் அணிந்தவன், அது எவ்வளவு நல்லதாக இருப்பினும் அதனை விட இன்னும் நல்ல ஒரு காலணி வேண்டும் என்று எண்ணுவான். இன்னும் சிலர், நல்ல ஒரு சப்பாத்தினை அணிந்தவாறே அது சரியில்லை என்று குற்றங் கூறுவார்கள். இவ்வாறு அருமை தெரியாது நமக்குக் கிடைத்தவற்றை வைத்துச் சந்தோசங் காணத் தெரியாதவர்கள் பலர். எதனையும் அருமையாக நினைத்து, இறை நம்பிக்கை இருப்பின் அதனைத் தந்த இறைவனுக்கு நன்றி கூறியோ, இறைவனை நம்பாதவர்கள், அதனைத் தந்த இப் பூமிக்கோ அல்லது இயற்கைக்கோ நன்றியினைத் தெரிவிக்க வேண்டுமென்பது என் கருத்து.

அனேகமானவர்கள் நம்புவது, எந்தவொரு உறவு முறையிலும் ஒரு 'நம்பிக்கை' என்பது ஒவ்வொருத்தரும், பொய் சொல்லாது ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவர்களாக நடந்து கொள்வது என்று எண்ணுவார்கள். ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால் நீ உனக்கு உண்மையுள்ளவனாகவும், நீ நீயாகவும் எப்போதும் அந்த விரும்பியவளுடனோ/ விரும்பியவனுடனோ நடந்து கொண்டாயானால் அதுவே உண்மையான உன்னை, உன் உறவுவினை நேசிக்க வைக்கும். காதல் என்பது வெளியில் ஒன்றாகச் சுற்றித் திரிவதிலோ, ஒருவருக்கொருவர் பூ (றோசாப் பூ) கொடுப்பதிலோ, பரிசுகள் கொடுப்பதனாலோ, அல்லது அழகாய் இருப்பதனாலோ அல்லது முத்தங்கள் கொடுப்பதால் மட்டுமோ வருவதன்று... என்னைப் பொறுத்தவரையில், இது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக் கூடிய சுழ்நிலையை ஏற்படுத்தி ஒருவரைப் பற்றி முழுமையான உணர்வை மற்றவனுக்கோ/ மற்றவளுக்கோ எடுத்து இயம்பக் கூடியதாக இருக்க வேண்டும், அதுவே ஒருவர் மற்றவருக்கு, ஆசானாகவும், உற்ற நண்பனாகவோ/ நண்பியாகவும், ஆலோசகராகவும் இருக்கச் செய்யக் கூடியதாக அமைய வேண்டும்.


நாம் அனைவரும் இவ் உலகிற் பிறந்து வாழ்வதற்கு ஏதோ ஒரு காரணமாவது இருக்கும் என்று நான் நம்புகின்றேன். ஆண்/ பெண்/ பணம்/ பதவி மட்டும் வாழ்க்கையில் எல்லாமும் ஆகி விடாது. அதிலும் மேலான விடயங்கள் வாழ்வில் இருக்கின்றன. நாம் சந்தோசமாகவும், நகைச்சுவை உணர்வோடும் வாழ்க்கையைப் பார்ப்பது நல்லது, ஆனால் வாழ்வையே நகைச்சுவைக்குரியது ஆக்கிவிடக் கூடாது.


நாம் அனைவரும் ஒரு அவசரமானதும், வேகமானதுமான வாழ்க்கையினைக் கொண்டு நடத்துகின்றோம், ஆகவே பொதுவாகவே எம்மைச் சுற்றி என்ன நடக்கின்றன என்பதனை அவதானிக்கத் தவறி விடுகின்றோம். இவ்வாறே எம் வாழ்வானது தொடரின் நாம் நிறைய விடயங்களை இழக்க வேண்டி வரும். ஆகையால் நடந்து வந்த பாதையினைத் திரும்பிப் பார்ப்பதும், நமக்கு உதவியவரை நினைபதும் மிகவும் முக்கியமானது. நாம் இதுவரை செய்த விடயங்களினையும், இனி என்ன செய்ய வேண்டும் என்பதனையும் ஆராய்ந்து செயற்பட வேண்டும்.


ஒரு வேலையினைக் கடின உளைப்புடன் செய்வதால் மட்டும் அதில் பயன் நமக்கு வந்து விடாது என்பது எனது நம்பிக்கை. கடின உளைப்புடன் கூடிய செய்யும் விடயத்தில் ஆர்வமும், நம்பிக்கையும், விருப்பமும் இருத்தல் என்பது மிகவும் முக்கியமானதாகும். அதுவே எமக்கு வெற்றிகளை ஈட்டித் தரும்.


அனைவரையும் மதித்தும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும். ஒருவர் இருக்கும் போது அன்பாக நடக்காது நாம் அவரை இழந்த பின்பு நினைத்து அழுவதால் என்ன பயன்? ஆகவே யாரும் நம்முடன் இருக்கும் பொழுது அன்பாக அவர்களுடன் நடக்க வேண்டும் என்பது எனது எண்ணம். எவ்வாறு அப்படி நடப்பது என்று எண்ணினால், நாளை நான் உயிருடன் இல்லாது போனால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்கும் பொழுது, நமது ஆணவம், அகந்தை (ஈகோ), மற்றும் பிடிவாதம் அனைத்தும் எம்மை விட்டுப் போகும்; அப்பொழுது நாம் அனைவரிடமும் மரியாதையுடனும், பக்குவமாகவும் நடந்து கொள்ளத் தொடங்குவோம். நாம் உண்மையாகவே வெறுக்கும் ஒருவருடன் இவ்வாறு நடந்து பார்த்தால், நாமே நடப்பதனைப் பார்த்து வியப்படைவேம். இது கடினமான விடயமே தவிர, முடியாத விடயமல்ல.


மனித வாழ்வில் நான் என்ற அகந்தை ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. சிலர் எண்ணுவார்கள் தாம் என்ன செய்தாலும் மற்றவர்கள் அதனைக் கவனிக்க மாட்டார்கள், ஆகவே தாம் எதுவும் செய்யலாம் எவரையும் எப்படியும் நடத்தலாம் என்று, ஆனால் எல்லாருமே முட்டாட்களல்ல. பொதுவாகவே பலரும் பிழை செய்தவர் முன் சென்று, நீ பிழை செய்து விட்டாய் என்று வாதிட்டுக் கொண்டு இருக்க விரும்ப மாட்டார்கள். ஏன் எனின், இவரிடம் வாதிட்டு ஒரு பயனும் இருக்காது, அத்துடன் இதைச் சொல்லி ஏன் அவர் மனதைக் கஸ்ரப் படுத்த வேண்டும் என்று விட்டு விடுவார்கள். ஆனால் யார் முன்னும் வந்து நீ செய்த விடயம் பிழை என்று கூறுபவர்கள் பொதுவாகவே உன்னை உண்மையாக நேசிப்பவர்களாக இருப்பார்கள். என்ன என்னால் விளங்கிக் கொள்ள முடியாது இருக்கின்றது என்றால், சுடு வார்த்தைகளால்... நானே பெரியவன்... நான் சொல்வது மட்டுமே சரி என்பதனை நிச்சயப்படுத்துவதற்காக நடத்தப்படும் பேச்சுப் பிடுங்கலில் அனேகமானவர்கள் தம்மில் உண்மையாக அன்பு செலுத்துபவர்களையும் உண்மையான நண்பர்களையும் இழந்து விடுகின்றார்கள். நட்பு என்பது ஒரு அரிய உறவு, அதாவது எமது வாழ்வில் அனைத்துச் சொந்தங்களும் ஏற்கனவே இறைவனால் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன, ஆனால் நண்பர்களை மட்டுமே நாம் தேர்ந்தெடுக்கின்றோம். இவ் வகையில் நமக்கு வரும் மனைவியோ/ கணவனோ கூட நம் நண்பர்களே என்பது எனது கருத்து.


நாம் ஒவ்வொரு முடிவுகளையும் எமக்கு வாழ்வில் நடந்த அனுபவங்களையும், எம்மைச் சுற்றி நடப்பவற்றையும் எமது பெற்றோரால் நம்மில் ஏற்படுத்தப்பட்ட சில கலாச்சார, பண்பாட்டு நம்பிக்கைகளையும் வைத்தே எடுக்கின்றோம். சிலவேளைகளில் அனைவரிலும் அன்பு செலுத்துவது என்பது சொல்லளவில் மட்டும் செய்யக் கூடிய ஒன்றாக இருக்கும், அனைவரிலும் அன்பு செலுத்துவது என்பது மிகவும் கடினமான விடயம், அத்துடன் சிலர் அவர்கள் செயல்கள் மூலம் அன்பு செலுத்தவே தகுதி அற்றவர்களாக இருப்பார்கள்; ஆனால் நாம் அனைவருமே இறைவன் படைப்பில் வித்தியாசமானவர்கள் என்பதனை நாம் ஏற்போமானால், மற்றவர்கள் மற்றவர்களாகவே செயற்படுகிறார்கள் என்பதனை எம்மால் ஏற்கக் கூடியதாக இருக்குமானால், மற்றவர்கள் செய்யும் விடயங்களை எம்மால் குறைந்தது சகித்துக் கொள்ளக் கூடியதாக ஆவது இருக்கும்.


நாம் அனைவரும் மறக்காமல் இருக்க வேண்டியது யாரும் கெட்டவனாகப் பிறப்பதில்லை, அதே வேளை ஒவ்வொருவரின் வாழ்விலும் எப்போதாவது மாற்றங்கள் நிகழ்ந்தவாறே இருக்கும்; ஏன் எனின் இன்று சரியாக நமக்குத் தெரிந்த விடயம் நாளை சில வேளைகளில் பிழையாகத் தெரியும்... அவ்வாறே நேற்றுப் பிழையாகத் தெரிந்த விடயம் இன்று சரியானதாகப் படும். நாம் வாழும்போது வாழ்வில் நிரந்தரமான ஒரே விடயம் என்றால் "மாற்றங்கள்" மட்டுமே அத்துடன் நம் 'பிறப்பு' நிச்சயமற்றது... நாம் எங்கு எப்பொழுது எப்படிப் பிறப்போம் என்று யாருக்கும் தெரிவதில்லை, ஆனால் நமது 'இறப்பு' என்பது ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக நடைபெற இருக்கும் விடயமே. ஆகவே நாம் இவ்வுலகில் இருக்கும் சிறிய காலத்தில், போலிப் பகட்டிற்காக மற்றவர்களுடன் போட்டி, பொறாமையுடன் வாழாது மற்றவர்கள் மீது அன்பு செலுத்திச் சந்தோசமாக வாழ வேண்டும் என்பது எனது எண்ணம்... நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்??

Tuesday, May 01, 2007

விழுத்த விழுத்த எழுவோம்

விழ விழ எழுவோம் என்பது, நம் நாட்டில் இருக்கும் ஒரு நம்பிக்கையினை ஊட்ட கூறப்படும் ஒரு கூற்று. நாம் எவ்வளவு தோல்விகளைச் சந்தித்தாலும் மனஞ் சோர்ந்து போகாது எழுந்து நம் வெற்றிக்காகப் பாடுபடுவோம் என்பது அதன் பொருள். ஈழத்தில், விழ விழ எழுவேம் என்றால், எத்தனை பேரைக் கொன்று குவித்தாலும் நாம் வித்தாக விளைந்து மீண்டும் எமது உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் போராடுவோம் என்பது பொருள். நான் இங்கு "விழுத்த விழுத்த எழுவோம்" என்று கூறக் காரணம்... மற்றவர்கள் தெரிந்தே எம்மை விழுத்தினாலும் (நாமாக விழாது மற்றவர்களால் விழுத்தப்படுவதாலும்) நாம் மீண்டும் எழுந்து நின்று எமது நோக்கினைச் சென்றடைவோம் என்ற பொருளைக் எடுத்துக் கூறவே.

ஈழத்தில் இருந்து இந்திய இராணுவம் சென்றாலும், தமிழர்களுக்கு நிச்சயமாகத் தெரிந்த ஒரு விடயம் போர் ஓய்ந்து விடப் போவதில்லை; இது இன்னும் ஒரு உத்வேகத்தோடும், அதி கூடிய பாதிப்புடனும் இலங்கை அரசினால் தமிழர்கள் மீது ஏற்படுத்தப்படவுள்ளது என்பதனை தமிழ் மக்கள் அறிந்திருந்தனர். புகையிரதப் பாதை இருந்த இடம் தெரியாது தண்டவாளங்கள், சிலிப்பர் கட்டைகள் (யாருக்காவது இதன் தமிழ் தெரியுமா?? மரக் குற்றிகள் என்பது சரியாக இருக்குமா?), கற்கள் அனைத்தும் பதுங்கு குழிகள் அமைப்பதற்காக எடுக்கப்பட்டன. புகையிரதத் தண்டவாளங்கள் இருந்த இடங்களில் கொஞ்சங் கொஞ்சமாகக் கடைகள் ஆரம்பிக்கப்பட்டன. சில மாதங்களிலேயே அங்கு புகையிரதப் பாதை இருந்ததற்கான அடையாளங்கள் இல்லாமற் போயின.

இக் காலப் பகுதியிலேதான் புலிகள் வீடியோ கொப்பிகளை வெளிவிட ஆரம்பித்ததாக ஞாபகம், அதாவது இவ் வீடியோக்கள் எவ்வாறு சரியான முறையில் பதுங்கு குளிகள் அமைப்பது (ie: T bunker, L bunker, S bunker... ect), எவ்வாறு எறிகணை, குண்டு வீச்சு ஆகியவற்றிலிருந்து மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வது, எவ்வாறு சரியான முறையில் விவசாயம் செய்வது போன்ற விடயங்களைப் பாமர மக்களிற்கும் புரியும் படி வீடியோ மூலம் விளங்கப்படுத்தி மக்களிற்கு இது சார்பான அறிவினை ஊட்டும் முறையிலான கல்விகளைப் புகட்டினார்கள். பிற் காலத்தில், 90களில் இயற்கை முறையிலான பசளைகள் தயாரித்தல், எவ்வாறு ஒரு அடுப்பிலிருந்து அதிக பலனைப் பெறலாம்... அதாவது இக் கால கட்டத்தில், முக்கியமாக யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய பகுதியில் உள்ளவர்கள் விறகு வாங்கித் தான் சமைப்பார்கள், அத்துடன் இக் காலப் பகுதியில் விறகின் விலை அதிகரித்ததால், எவ்வாறு மரங்களை அதிகம் வெட்டாது, குறைந்த அளவு விறகு மூலம் அடுப்பிலிருந்து அதிக அளவு பலனைப் பெறலாம் என்பதனை "இரட்டைச் சூட்டடுப்பு" மூலம் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தினர் அறிமுகப்படுத்தினார்கள்... இவ்வடுப்பு இக் காலகட்டத்தில் மிகவும் பிரபல்யமாக இருந்தது. எமது வீட்டில் விறகிற்குப் பஞ்சமில்லாததால் எம் வீட்டில் அதனை யாரும் பயன்படுத்தவில்லை. இவ்வாறு தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தினரின் பெருமைகளை வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.

இது வரை காலமும் உலங்கு வானூர்தி (Helicopter) மற்றும் பொம்பர் ஆகியவற்றை மட்டும் கண்ட நாம், இரண்டாங் கட்டப் போர் தொடங்கியதும், புதிது புதிதான ஆகாய விமானங்களைக் கண்டோம்: சகடை, புக்காரா, அஃப்ரோ ஆகிய விமானங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டோம் பொதுவாக இந்த விமானங்கள், இராணுவத் துருப்புக்களை ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்வதற்காகப் பயன்படுத்தப்படும், அத்துடன் இவ் விமானங்கள் பீப்பாக் குண்டுகள் போடுவதற்காக எம்மீது பாவிக்கப்பட்டன. பீப்பாக் குண்டுகள் எனும் பொழுது, அவை இரசாயனம்/ அமிலம் நிறைந்த குண்டுகளாகவோ, அல்லது மலக் கழிவுகள் நிறைந்த குண்டுகளாகவோ இருக்கும். இவ்வகையான குண்டுகள் விழுந்தால், அதனைச் சுவாசிப்பவர்கள் கொடிய நோய் வாய்ப்பட்டு அவதிப்படுவார்கள். அத்துடன் இவ்வகைக் குண்டுகள் சுற்றம், சுற்றாடலை மாசுபடுத்துபவையாகவும் இருந்தன.

அனேகமான நாட்களில், நான் காலை 5மணி அளவில் எழுந்து, ரியூசனுக்குச் சென்று பின்னர் வீடுவந்து வெளிக்கிட்டுப் பாடசாலை செல்வேன். பாடசாலை முடிந்ததும் நாம் மீண்டும் ரியூசன்சென்று மாலை 6 மணி முன்பு வீடு வந்து சேர்வோம். வீட்டிற்கு மாலை 6 மணிக்கு முன்னர் வராது விடின் வீடு வரும்போது, வீட்டார் அனைவரும் தெரு வாசலில் நின்று எப்பொழுது வீடு வந்து சேர்வான் எமது பையன் என்று பார்த்தவாறு நிற்பார்கள். எங்காவது செல்ல வேண்டும் எனின் வீட்டாருக்கு எங்கு செல்கிறோம், எப்பொழுது வருவோம் என்பதனைக் கூறியே செல்ல வேண்டும். சொல்லாமல் சென்றாலோ அல்லது வீட்டிற்கு நேரந் தாழ்த்தியோ வந்தால், நல்ல டோஸ் (ஏச்சு) விழும் (சிறு வயதில் அடி விழும்). இது பொதுவாகவே அனைத்துத் தமிழர்கள் வீட்டிலும் நடக்கும் விடயங்கள். ஏன் எனின், போர்ச் சூழலில் எது எப்பொழுது நடக்குமோ என்ற பயமும், வீட்டில் வந்து எப்பொழுதும் படித்தபடியே தம் பிள்ளைகள் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் ஆகும். தமிழர்களாகிய நாம் நன்கு கல்வி கற்கா விடின் நல்ல ஒரு உத்தியோகமோ, அல்லது பல்கலைக் கழகமோ செல்ல முடியாது என்பதே அதற்குக் காரணமாகும்.

இதனையே வைத்தியக் கலாநிதி. பிரையன் செனவிரட்ன (Dr. Brian Senaviratne`) தனது கட்டுரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:
“The Tamil students received two serious blows. The Sinhala Only act of 1956 made it difficult for them to secure employment. A policy of standardisation made it much more difficult to get admission to a university. In the original form in 1971, discrimination was on the basis of language and the region the student came from. The system that has prevailed since 1977 is as follows: 30% are filled on island-wide merit; 55% by allocation to revenue districts in proportion to their population, and filled within each district on merit; 15% are given to districts deemed educationally underprivileged. How this operated against Tamil students can bee seen from the following quotation” 1 - Brian Senewiratne: Sri Lanka, A Synopsis Of the Racial Problem", p 3
“Students in the North (almost certainly Tamils) and those in Colombo (two-thirds Sinhalese and one-third Tamils) continue to suffer serious discriminations. In 1983/4, 530 students who had the necessary grades for admission to the Faculties of Medicine, Science and Engineering were excluded, to accommodate 519 who had lesser marks. Of the excluded students, over 50% were Tamils." 1 - Brian Senewiratne: Sri Lanka, A Synopsis Of the Racial Problem", p 3
Such discrimination contradicts U.N policy.Article 26.1 of the Universal Declaration of Human Rights states: "Every one has the right to education - higher education shall be equally accessible to all on the basis of merit."

நாம் கல்வி கற்ற பாடசாலைகளில், எந்தவகையான ஒரு தளபாடங்களோ, அல்லது உபகரணங்களோ அரசாங்கத்தினால் வளங்கப்படவில்லை. உதாரணத்திற்கு: விஞ்ஞான ஆய்வு கூடத்தில், அனேகமான இரசாயனப் பொருட்களோ, உபகரணங்களோ இருக்காது. ஆகவே நாம் பொட்டாசியம் எவ்வாறு இருக்கும் என்பதனையோ, அல்லது நைதரசன் எவ்வாறு இருக்கும் என்பதனையோ அறியவேண்டும் எனின் பாடப் புத்தகத்தின் மூலமாகத் தான் அறியக் கூடியதாக இருந்தது. செய் முறையினூடான அறிவு எமக்கு இருக்கவில்லை, பாடப் புத்தகத்திலிருந்து பாடமாக்கியே நாம் ஒவ்வொன்றையும் பரீட்சையில் எழுத வேண்டி இருந்தன. எம்மைக் கல்வி அறிவு அற்றவர்களாக்க அரசாங்கம் செய்த சூழ்ச்சி, அவர்களின் இச் செயல் மூலமாகத் தோல்வியையே கண்டது.

இதனை இங்கு எழுதும் பொழுது எனக்குச் சிறு வயதில் எனது தந்தை ஒரு முறை கூறிய கதை ஒன்று தான் ஞாபகத்திற்கு வருகின்றது. " ஒரு ஊரில் ஒரு அனாதை ஏழைச் சிறுவன் இருந்தான், அவனை ஒருவர் தனது வீட்டில் வேலைக்காக அமர்த்தினார், சிறுவன் வேண்டுகோளிற் கிணங்கிச் சம்பளம் கொடுப்பதற்குப் பதிலாக அவர் சிறுவனைப் பாடசாலையிற் சேர்த்தார். மகா கஞ்சனான அந்த பணக்காரர் தனது மகனுக்கு அனைத்து வசதிகளும் செய்து பள்ளி அனுப்பி வைப்பார், ஆனால் அந்த ஏழைச் சிறுவனுக்கோ ஒரு மாதத்திற்கு ஒரு தாளும் (பேப்பர்) ஒரு அழியும் (ரப்பர்/ இரேசர்) ஒரு பென்சிலுமே கொடுத்து விடுவார். ஆகவே அந்த ஏழைச் சிறுவனுக்கு அன்று படிக்கும் விடயங்களை உடனுக்குடனேயே படித்து ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தப் பணக்காரனின் மகனோ வீட்டில் கொப்பிகளை அடுக்கி வைத்து விட்டு தவணைக் கடைசியில் படிக்கலாம் என்று எண்ணி, பரீட்சை வந்த பொழுது அனைத்தையும் கற்கமுடியாமலும், உள் வாங்க முடியாமலும் பரீட்சையில் சித்தி எய்தவில்லை. ஆனால் ஏழைச் சிறுவனோ அனைத்துப் பாடங்களையும் படித்துத் தெரிந்திருந்ததால், ஒவ்வொரு பாடங்களுக்கும் முளுப் புள்ளிகளையும் பெற்றுச் சித்தி எய்தினான்.

இவ்வாறே குப்பி விளக்கிலும், சீரற்ற நிலையிலும் இருந்த போர்ச் சூழலில் நாம் கல்வியைக் கற்றோம். எத்தனை பொருளாதாரத் தடைகளை அரசு ஏற்படுத்திய பொழுதும் நாம் அதற்காக புதிய ஒன்றைக் கண்டு பிடித்தோம், கண்டு பிடித்து தடை செய்த பொருளிற்குப் பிரதியீட்டுப் பொருளாக உபயோகித்தோம். இவ்வாறு எமது வாழ்வானது இருட்டினில் தள்ளப்பட்டு பதுங்கு குழிக்குள் வைத்துப் பதுக்கப்பட்ட பொழுதும் எமது தன் நம்பிக்கையினாலும், சுய முயற்சியினாலும் எம்மால் மீண்டும் மீண்டும் எழுந்து இவ் உலகில் நாமும் சுதந்திரத்துடனும், கல்வி மான்களாகவும் வாழ்ந்து காட்டுவோம் என்பதில் உறுதி குலையாமல் இருக்கக் கூடியதாக இருந்தது. இதனை நாம் நிரூபித்துங் காட்டினோம். யாழ் மாவட்டம், இலங்கையில் எவ்வளவு பிரச்சனைகள் வந்த போதும் கல்வியில் முன்னிலையிலேயே இருந்தது. இவ்வாறு தமிழ் மக்களாகிய நாம் இன்னும் விழுத்தப் பட்டுக் கொண்டு இருப்பினும், விழுத்த விழுத்த நாம் எழுந்து கொண்டே இருப்போம்... விழுதுகள் விட்டு.